அமெரிக்காவின் வரி மிரட்டல்; மாற்று வழி தேடுவது அவசியம்!

5 ஆவணி 2025 செவ்வாய் 06:07 | பார்வைகள் : 103
அமெரிக்க நாட்டின் அதிபராக, கடந்த ஜனவரி மாதம் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். அதன்பின், அமெரிக்கா மீது பிற நாடுகள் விதிக்கும் வரியை போலவே, தங்கள் நாடும் வரி விதிக்கப் போவதாக அறிவித்தார்.
அத்துடன், இந்தியா உள்ளிட்ட நாடுகள், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள அவகாசம் தரும் வகையில், வரி விதிப்பை, 90 நாட்களுக்கு ஒத்திவைத்தார்.
இதனால், ஜூலை 9-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இருந்த வரி விதிப்பு, வரும் ௭-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்தியா -- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நீடித்த நிலையில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என, சமீபத்தில் டிரம்ப் அறிவித்தார். இந்த வரி விதிப்பு, இம்மாதம், 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதையும், ராணுவ தளவாடங்கள் வாங்குவதையும் இந்திய அரசு கைவிட வேண்டும். இல்லையெனில், இறக்குமதி பொருட்கள் மீது கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
இது, அமெரிக்காவுடன் நல்லுறவை தொடர விரும்பும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி ரகங்களில், 28 சதவீதம் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது. இந்திய ஜவுளிகளுக்கு, 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டால், நம் நாட்டின் ஜவுளி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும்.
அதேபோல, மருந்து பொருட்கள், அரிசி, மளிகை, வைரம், தங்கம், வெள்ளி நகைகள் உள்ளிட்ட பல பொருட்களும் அமெரிக்காவுக்கு கணிசமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அமெரிக்காவின், 25 சதவீத வரி விதிப்பால், இந்தப் பொருட்கள் சார்ந்த துறைகள் கடுமையாக பாதிக்கப்படும்.
கடந்த, 2024 - 25ம் நிதியாண்டில், அமெரிக்காவுக்கான இந்திய பொருட்களின் ஏற்றுமதி, 7.35 லட்சம் கோடி ரூபாயாகும். இது, மற்ற நாடுகளுக்கான இந்திய பொருட்களின் ஏற்றுமதியை விட அதிகமாகும். அதே நேரத்தில், அமெரிக்காவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்த பொருட்கள், 3.88 லட்சம் கோடி ரூபாய்.
தற்போது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு தானியங்களுக்கு, இந்தியாவில், 40 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதை, 10 சதவீதமாக குறைக்க வேண்டும் என, அமெரிக்கா வலியுறுத்துகிறது. அத்துடன், நம் நாட்டின் விவசாயம் மற்றும் பால் வணிகத்திலும் கால் பதிக்க அமெரிக்க நிறுவனங்கள் விரும்புகின்றன. அதை அனுமதித்தால், பல கோடி இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், அதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.
இந்த விஷயங்களில் தங்களின் நிர்பந்தங்களை இந்திய அரசு ஏற்க வேண்டும் என்பதற்காகவே, அதிபர் டிரம்ப், 25 சதவீதம் வரி விதித்திருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்த தந்திரம் மற்றும் நெருக்கடிகளை, இந்திய பொருட்களுக்கு மாற்று சந்தைகளை கண்டறிவதன் வாயிலாக, மத்திய அரசு முறியடிக்க வேண்டும். இந்த விஷயத்தில் காலம் தாழ்த்தாமல் செயல்பட வேண்டியது அவசியமாகும்.
அதுமட்டுமின்றி, 'ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயும், ராணுவ தளவாட பொருட்களும் வாங்கக்கூடாது; மீறி வாங்கினால், அபராதம் விதிக்கப்படும்' என, அதிபர் டிரம்ப் அச்சுறுத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டு மக்களின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய, எந்த ஒரு நாட்டில் இருந்தும் தள்ளுபடி விலையில், கச்சா எண்ணெய் பெறுவது சிறப்பானதே. இதனால், பல கோடி ரூபாய் மிச்சமாகும்.
இந்த விஷயத்தில், நம் நாட்டின் நலனை கருத்தில் கொள்ள வேண்டுமே அன்றி, அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு எல்லாம் அடிபணியக்கூடாது. மொத்தத்தில், அதிபர் டிரம்ப் மிரட்டல்களுக்கு பணியாமல், சுமுகமான முறையில், இரு தரப்பும் பலன் பெறும் வகையிலான தீர்வு காண வேண்டும்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025