பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிரடி மாற்றம் ?

2 ஆடி 2025 புதன் 17:46 | பார்வைகள் : 355
பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனில் பொதுமக்களும் போட்டியாளராக கலந்துகொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளது.
பல்வேறு மொழிகளில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. பல்வேறு பிரபலங்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் போட்டி, சண்டை, காதல், சிரிப்பு, கலவரத்திற்கு பஞ்சமே இருக்காது. இந்த நிகழ்ச்சியை 1 முதல் 7வது சீசன் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். பிக்பாஸின் கடந்த 7 சீசன்களை சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் 8வது சீசனில் விலகுவதாக அறிவித்தார். அவருக்குப் பதிலாக கடந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில் விரைவில் பிக்பாஸின் அடுத்த சீசன் தொடங்கவுள்ளது. இம்முறை பிக்பாஸ் சீசனில் பிரபலங்கள் யார் யார் பங்கேற்கப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே இந்த சீசனில் பிக்பாஸில் பொதுமக்களும் பங்கேற்கலாம் என தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அறிவித்துள்ளனர். தொடங்கவுள்ள 9ம் சீசனில் பொதுமக்களும் போட்டியாளராக பங்கேற்கலாம் என்று அறிவித்திருக்கின்றனர். இதற்காக பொதுமக்கள் விண்ணப்பிக்கும் பொருட்டு இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் தங்களை பற்றிய வீடியோவுடன் விண்ணப்பிக்கலாம் என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளது. தெலுங்கில் மட்டுமே இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.தமிழ் பிக்பாஸிலும் 9வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. இதனால் தமிழிலும் இப்படியான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.