Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

கட்டுக்கோப்பாக நடந்த முருக பக்தர் மாநாடு: அரசியல் கட்சிகளுக்கெல்லாம் இது ஒரு பாடம்

கட்டுக்கோப்பாக நடந்த முருக பக்தர் மாநாடு: அரசியல் கட்சிகளுக்கெல்லாம் இது ஒரு பாடம்

25 ஆனி 2025 புதன் 12:37 | பார்வைகள் : 1944


மதுரையில் கட்டுக்கோப்புடனும், ஒழுங்குடனும் நடந்த முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தின் ஆன்மிக ஆழத்தையும், தமிழர் பண்பாடு, பாரம்பரியத்தையும் பறைசாற்றி அரசியல் கட்சிகளின் மாநாடுகளுக்கு ஒரு பாடமாக அமைந்தது.

ஹிந்து முன்னணி சார்பில் தமிழகத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, ஏதேனும் ஒரு தலைப்பில் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழகத்தில் அதிகம் வணங்கப்படும் முருகனை முன்னிறுத்தி, மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள மைதானத்தில் 'குன்றம் காக்க... கோவிலை காக்க...' எனும் தலைப்பில் முருக பக்தர்கள் மாநாடு நேற்று முன்தினம் நடந்தது.

இது ஆன்மிகம் சார்ந்து மட்டுமில்லாமல், தமிழர்களின் பாரம்பரிய, பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. தமிழர் வாழ்வில் முருக பக்தி என்பது உள்ளார்ந்த உணர்வு. அத்தகைய உணர்வே எந்தவொரு அரசியல் சாயமும் இன்றி மக்களை மதுரையில் ஒன்றிணைத்தது.

ஆன்மிகத்தையும், கலாசாரத்தையும் தமிழக மக்கள் மிகுந்த ஆழத்தோடு அணுகுகின்றனர் என்பதை முருக பக்தர்கள் மாநாடு உணர்த்தியுள்ளது. மாநாட்டில் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றுபட்டனர். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கூட ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் சொந்த செலவில் வந்தனர். பங்கேற்றவர்களில் 70 சதவீதம் பேர் இளைஞர்களே.

இந்தியா முழுவதும் கடவுள் முருகனை பல்வேறு பெயர்களில் வழிபட்டாலும், அறுபடை வீடுகள் தமிழகத்தில் தான் அமைந்துள்ளன. தமிழர் வாழ்வியலில் முருகன் நீக்கமற நிறைந்துள்ளார். முருகனின் கந்த சஷ்டி கவசம் பாடல் இழிவுபடுத்தப்பட்ட விவகாரத்தின் போது அரசியல் கட்சிகள் கண்டு கொள்ளவில்லை என்பது பக்தர்களின் வருத்தம். தொடர்ந்து, சென்னிமலை, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தையடுத்து முருகன் மலையை காக்க வேண்டும் என்பதற்காக ஹிந்து முன்னணி இந்த நிகழ்ச்சியை நடத்தியது.

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், 'ஹிந்து மதத்தை காப்பாற்ற ஒன்று திரள்வோம்' என பேசியதும், பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, 'அரசியல் சார்ந்து இல்லாமல், ஹிந்துக்கள் அனைவரும் இணைய வேண்டும். மதம் மாறுவதை தடுக்க வேண்டும்' என வலியுறுத்தியதும் மாநாட்டில் எழுச்சியை ஏற்படுத்தியது. அரசியல் சார்ந்து இல்லாமல் பக்தியின் அடிப்படையில் ஹிந்துக்கள் ஒன்று திரள வேண்டும் என்ற கருத்தே மாநாட்டில் பரவலாக எதிரொலித்தது.

கந்த சஷ்டி கவசம்

மாநாட்டில் முக்கிய நிகழ்வாக கந்த சஷ்டி கவசம் பாடப்பட்டது. கந்த சஷ்டி கவசம் குறித்து அண்ணாமலை பேசியபோது, 'கந்த சஷ்டி கவசத்தை இலக்கியமாகவும், ஆன்மிகமாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பார்க்கலாம். மனித உடலில் தொப்புள் கொடிக்கு கீழே உள்ள பகுதியை பழங்காலத்தில் 'கந்த' எனவும், 'சஷ்டி' என்றால் 'சட்டி' என கூறப்பட்டது.

'தொப்புள் கொடிக்கு கீழ் உள்ள பகுதி சட்டி போல் இருக்கும். அதில்தான் கருப்பை உள்ளது. சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் உயிர் உண்டாகும் என்பதை குறிக்க கந்த சஷ்டி கவசம் பாடப்பட்டது' என்றார். இந்த விளக்கமும், கூட்டாக அனைவரும் பாடியதும் கந்த சஷ்டி கவசத்தை தினமும் வீட்டில் பாட வேண்டும் என்ற துாண்டுதலை பக்தர்களிடையே ஏற்படுத்தி உள்ளது.

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வந்த பக்தர்களை, ஹிந்து முன்னணியை சேர்ந்த 2,000 தொண்டர்கள் வழிநடத்தினர். மாநாட்டை காணும் ஆர்வத்தில் சிலர் போட்டி போட்டுக்கொண்டு மாநாட்டு திடல் முன் வந்தனர். மாநாட்டை நடத்திய நிர்வாகிகள், இருக்கையில் அமரும்படி அறிவுறுத்தியதும் அவர்கள் அமைதியாக போய் அமர்ந்தனர்.

வாசலில் இருந்து போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பினாலும், மாநாட்டு திடலில் போலீசார் மிகக்குறைந்த எண்ணிக்கையில் தான் நின்றனர். என்றாலும் எந்த சலசலப்பும் இல்லாமல், கட்டுப்பாட்டோடு பக்தர்கள் அமர்ந்திருந்தனர்.

பாடமாக அமைந்தது

இரவில் சாலையில் லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வெளியே சென்ற போது போக்குவரத்து ஸ்தம்பித்தது. அத்தகைய சூழலிலும் எவ்வித பிரச்னையுமின்றி தள்ளுமுள்ளு, நெரிசல் இன்றி மக்கள் கட்டுப்பாட்டோடு கலைந்து சென்றனர். இந்த காட்சி எல்லாம் அரசியல் கட்சிகளின் மாநாடுகளுக்கு மாறுபட்டதாக இருந்தது.

மாநாட்டிற்கு முன்னதாக மா.கம்யூ., மற்றும் விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு கட்சிகள், 'மதநல்லிணக்கத்தை கெடுத்து கலவரத்தை உருவாக்க முருக பக்தர் மாநாடு நடக்கிறது' என, எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அவற்றிற்கு எல்லாம் பதிலடி தருவதாய் எந்த பிரச்னையும் இன்றி அமைதியாக மாநாடு நடந்தது. லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் ஒரு மாநாட்டை எப்படி நடத்த வேண்டும் என்று கட்சிகளுக்கு சொல்லும் பாடமாக, முருகர் பக்தர் மாநாடு அமைந்தது எனலாம்.

அரசியலா? ஆன்மிகமா?

மாநாட்டில் அரசியல் கருத்துகள் பேசக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியது. மாநாட்டில் நேரடியாக அரசியல் கருத்துகள் கூறப்படாவிட்டாலும், தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை, பின்னணியை மாநாடு பிரதிபலித்தது. தீர்மானத்திலும், தேர்தலில் ஓட்டு வங்கியை அதிகரிக்க ஹிந்துக்கள் ஒன்றுபட வேண்டும் என இடம் பெற்றிருந்தது. 
அண்ணாமலை பேசுகையில், ''ஏற்கனவே பேசிய ஹிந்து முன்னணி வழக்கறிஞர் கனிமொழியின் பேச்சை குறிப்பிட்டு, 'தமிழகத்தில் மதுரை முருகன் மாநாட்டிற்கு முன், மாநாட்டிற்கு பின் என்றுதான் அரசியல் சரித்திரம் இருக்கும்,'' என்றார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்