Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பணம் இல்லாத அளவுக்கு அரசுக்கு நெருக்கடியா?: ஐகோர்ட் கேள்வி

பணம் இல்லாத அளவுக்கு அரசுக்கு நெருக்கடியா?: ஐகோர்ட் கேள்வி

25 ஆனி 2025 புதன் 11:37 | பார்வைகள் : 1667


செலவுக்கு பணம் இல்லாத அளவுக்கு, அரசின் நிதி நிலைமையில் நெருக்கடி நிலவுகிறதா' என, 141 கோடி ரூபாய் நிலுவைத்தொகை கேட்டு, சமையல் எண்ணெய் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த, 'கே.டி.வி.ஹெல்த் புட்' என்ற நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கே.டி.வி.கண்ணன் தாக்கல் செய்த மனு:

சமையல் எண்ணெய் உற்பத்தியில், 1971 முதல் ஈடுபட்டுள்ளோம். சென்னை கொடுங்கையூரில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. 2002ம் ஆண்டு, 'ஏ.டபிள்யு.எல்., அக்ரி பிசினஸ்' உடன் இணைந்து, 'சன்லேண்ட் சூரியகாந்தி எண்ணெய், ரூபினி பாமாயில், ரூபினி வனஸ்பதி' போன்ற சமையல் எண்ணெய் வகைகளை உருவாக்கி உள்ளோம்.

எண்ணெய் பொருட்களை இறக்குமதி செய்தல், மொத்தமாக பாமாயில் விற்பனை செய்தல் போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறோம்.

நீதிமன்ற உத்தரவு


கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்தில், 'டெண்டர்'கள் எடுத்து, பொது விநியோக திட்டத்தின் கீழ், சமையல் எண்ணெய் வழங்கி வருகிறோம். அந்த வரிசையில், 1 லிட்டர் கொள்ளளவு உடைய 600 லட்சம் பாமாயில் எண்ணெய் பாக்கெட்டுகள் வினியோகம் செய்வதற்கான டெண்டர், கடந்த பிப்., 17ல் கோரப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் தேர்வு செய்யப்பட்டு, மார்ச் 13ல் அதற்கான உத்தரவை பெற்றோம். பின், டெண்டர் விதிமுறைகளின்படி, ஏப்ரல் முதல் மே வரை சமையல் எண்ணெய் வழங்கினோம். ஒப்பந்தப்படி பொருட்களை கொடுத்து முடித்தும், அதற்கான தொகை உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை.

நிலுவை தொகையை விடுவிக்கக்கோரி, அரசுக்கு மே, ஜூன் மாதங்களில் கடிதங்கள் அனுப்பப்பட்டன.

அனுப்பிய, 'பில்'களில் பணம் பெற்றது போக, 141 கோடியே 22 லட்சத்து 72,190 ரூபாய் வரை, இன்னும் பாக்கி உள்ளது. ஒப்பந்த நிபந்தனையின்படி, பொருட்களை சப்ளை செய்ததும், 30 நாட்களில் தொகையை வழங்க வேண்டும்.

உரிய காரணம் இன்றி, 30 நாட்களுக்குள் பணம் தராவிட்டால், வட்டியுடன் கோர உரிமை உள்ளது என, உயர் நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டுள்ளது.

பதில் இல்லை


எனவே, நிலுவைத் தொகையை, 18 சதவீத வட்டியுடன் செலுத்தக்கோரி, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. நிலுவைத் தொகை கேட்டு, பலமுறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும், இதுவரை தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் தரப்பில் எந்த பதிலும் இல்லை.

பொருட்களுக்கான தொகையை உரிய நேரத்தில் வழங்காததால், எங்கள் நிறுவனத்துக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, நிலுவைத் தொகையை, 18 சதவீத வட்டியுடன் உடனே விடுவிக்க உத்தரவிட வேண்டும்.

மேலும், இந்த வழக்கில் உரிய முடிவு எட்டும் வரை, நிலுவைத் தொகையை வட்டியுடன் நீதிமன்றத்தில் செலுத்த, தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாாரர் நிறுவனம் தரப்பில், 'சமையல் எண்ணெய் தொடர்ந்து வினியோகித்து வருகிறோம். நிலுவைத் தொகை, 200 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. எங்களுக்கு பணம் வழங்காமல், அடுத்த டெண்டர் கோரும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது' என்று, தெரிவிக்கப்பட்டது.

என்ன நடக்கிறது?


இதையடுத்து, நீதிபதி கூறியதாவது:

கடந்த இரண்டு வாரங்களாக, ஓய்வுகால பலன்கள் வழங்கப்படவில்லை; அரசு வழங்க வேண்டிய தொகைகள் தரப்படவில்லை என, வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

மாநிலத்தில் என்ன நடக்கிறது; மாநில அரசு முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

வழங்க வேண்டிய தொகையை தராமல் இருப்பது, எதைக் காட்டுகிறது; ஒருவேளை வழங்க வேண்டாம் என்ற எண்ணத்தில் இருக்கிறதா அல்லது மாநிலத்தில் அந்தளவுக்கு நிதி நெருக்கடி நிலைமை நிலவுகிறதா? இது, அரசை நடத்தும் வழியல்ல; இதுபோன்ற எண்ணம் ஏற்படுவதை மாற்ற, அரசு முன்வர வேண்டும்.

மனுதாரருக்கு நிலுவை தொகை வழங்குவது குறித்து, தமிழக அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க, அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிடப்படுகிறது.

விசாரணை, வரும் 27ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்