Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

குடும்ப பிரச்னையால் தவறு செய்துவிட்டேன்; போலீஸ் விசாரணையில் ...

குடும்ப பிரச்னையால் தவறு செய்துவிட்டேன்; போலீஸ் விசாரணையில் ...

25 ஆனி 2025 புதன் 06:37 | பார்வைகள் : 1716


போதைப்பொருள் வழக்கில் கைதான, அ.தி.மு.க., நிர்வாகி பிரசாத் போதைப்பொருள் மட்டுமல்லாமல் பல மோசடிகளில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், அவருடன் சிலர் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச கடத்தல் கும்பலிடம் இருந்து போதைப் பொருள் வாங்கி உபயோகப்படுத்தியதாக, திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு உள்ளார். நடிகர் -நடிகையர் பங்கேற்கும் இரவு விருந்துகளில், 'கோகைன், மெத் ஆம்பெட்டமைன்' போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருவதால், தமிழ் திரையுலகத்தினர் கலக்கத்தில் உள்ளனர்.

இந்நிலையில் சென்னை போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை நுங்கம்பாக்கத்தில், 'லார்டு ஆப் தி ட்ரிங்க்ஸ்' என்ற சொகுசு 'பார்' உள்ளது. இங்கு, கடந்த மாதம் 22ம் தேதி நடந்த மோதல் தொடர்பான வழக்கில் கைதான அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பிரசாத் வீட்டில் நடந்த சோதனையில் , அரசு வேலைவாங்கி தருவதாக கூறி 200 பேரிடம் பணம் பெற்று ரூ.2 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்த மதுரை ஆயுதப்படை தலைமைக் காவலர் செந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்தோஷ் என்பவருடன் கூட்டணி சேர்ந்து போலீஸ் உதவியுடன் தனிப்பட்ட நபர்களின் Call Details மற்றும் Location பெற்று, அவர்களை மிரட்டி பணம் பெற்றிருப்பது தெரியவருகிறது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். பிரசாத், பெங்களூருவை சேர்ந்த பிரதீப் மற்றும் கானா நாட்டை சேர்ந்த ஜான் ஆகியோரிடம் இருந்து கொக்கைன் போதைப்பொருளை பெற்று, தனக்கு தெரிந்த நண்பர்களிடம் விற்பனை செய்துள்ளார். இதற்காக சில இடங்களில் அவரது நண்பர்களுக்கு போதை விருந்தும் தந்துள்ளார். 11 கிராம் கொக்கைன் போதை மருந்து , பணப்பரிவர்த்தனை மற்றும் மின்னணு தொழில்நுட்ப சம்மந்தப்பட்ட ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு உள்ளார். தலைமறைவாக உள்ள எதிரிகளும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

பிரசாத்தின் நண்பர் அஜய் வாண்டையார் என்பவர் சென்னையிலும் மற்றும் சில இடங்களிலும் நில உரிமையாளர்களை மிரட்டியும், வெளிநாடுகளில் வசிப்பவர்களின் நிலத்தையும் அபகரிக்க, போலி ஆவணங்கள் தயார் செய்து, நிலங்களை அபகரிக்க முயற்சி செய்துள்ளார். அதற்கு உதவியாக இருந்த நாகேந்திர சேதுபதி மற்றும் சந்திரசேகர் (எ) செந்தில், சிவசங்கரன் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

அஜய் வாண்டையார் என்பவர் AJ Trust & Enterprises என்ற அமைப்பின் மூலம் இந்த பணப்பரிவர்த்தனை பற்றி விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. அஜய் வாண்டையார் மற்றும் அவரது கூட்டாளிகளின் மீது இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 22 நபர்கள் கைது செய்யப்பட்டும், 5 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்திலும், கைது செய்யபட்டுள்ளனர்.

தொடர் விசாரணையில் பிரசாந்த், அஜய் வாண்டையார் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து அரசு சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு மோசடி, நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவை சட்டவிரோதமாக பயன்படுத்துதல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கத்தில் விடுதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்