Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

அதிர்வலைகளை ஏற்படுத்திய பவன் கல்யாண்; காங்கிரஸ், இந்திய கம்யூ., கண்டனம்

அதிர்வலைகளை ஏற்படுத்திய பவன் கல்யாண்; காங்கிரஸ், இந்திய கம்யூ., கண்டனம்

24 ஆனி 2025 செவ்வாய் 06:42 | பார்வைகள் : 1414


முருக பக்தர்கள் மாநாட்டில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசிய பேச்சு, தி.மு.க., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் நேற்று முன்தினம் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில், பவன் கல்யாண் பேசுகையில், 'சிலர் நிறத்தை வைத்து அரசியல் செய்கின்றனர். நாம் நிறத்தின் வாயிலாக பார்க்கவில்லை; அறத்தின் வாயிலாக பார்க்கிறோம்.

எலி கூட்டம்

'நாம் அந்த கூட்டத்தை ஒரு பார்வை பார்த்தால், அந்த கூட்டம் காணாமல் போய்விடும். எலி கூட்டம் எவ்வளவு இருந்தாலும், ஒரு நல்ல பாம்பு சீறினால், எலிகள் ஓடிவிடும். சிவனின் கழுத்தில் உள்ள நாகபாம்பு போல் நாம் சீற வேண்டும்' என்றார்.

ஆன்மிகத்தை மையப்படுத்தியே பவன் கல்யாண் பேசுவார் என, எதிர்பார்த்த நிலையில், தி.மு.க., ஆட்சியை அகற்றுவதற்குஉரிய காரணங்களை மறைமுகமாக சுட்டிக்காட்டி, நடப்பு அரசியலை அவர் பேசியுள்ளார்.

தி.மு.க., கூட்டணியை எலிகள் கூட்டம் என்றும் அவர் சீண்டியுள்ளதால், அதற்கு தமிழக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில், பவன் கல்யாண் உள்ளிட்டோர் தேர்தல் பிரசார கூட்டமாக மாற்றி விட்டனர்.

பாசிச வலை

அரசியலையும், மதத்தையும் கலந்து, தேசிய அளவில் அரசியல் ஆதாயம் தேடிய பா.ஜ., தமிழகத்தில் கடவுள் பெயரை பயன்படுத்தி, தமிழக மக்களை பாசிச வலையில் சிக்க வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது' என, கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் கூறுகையில், '' பா.ஜ., கூட்டணி கட்சித் தலைவர், ஜனசேனா கட்சி நிறுவனர், ஆந்திர துணை முதல்வர் என்ற நிலையில் பவன் கல்யாண் பங்கேற்று, மதச்சார்பற்ற அரசின் கொள்கையை சிறுமைப்படுத்தியுள்ளார். வரும் 2026 சட்டசபை தேர்தலில் ஆதாயம் தேடும் நோக்கம் என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளார்,'' என்றார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்