நாட்டை விட்டு வெளியேறப்பணித்தால் - AME உதவிகள் இல்லை!!

16 ஆடி 2025 புதன் 19:01 | பார்வைகள் : 2598
நாட்டை விட்டு 30 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் எனும் Obligation de Quitter le Territoire Français (OQTF) ஆணை பிறப்பிக்கப்பட்டால், குறித்த நபருக்கு எவ்வித உதவிகளும் வழங்கப்பட மாட்டாது எனவும், சகலவித கொடுப்பனவுகளும் நிறுத்தப்படும் எனவும் அரசு அறிவித்த நிலையில், தற்போது AME உதவிகளும் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஜூலை 16, புதன்கிழமை இத்தகவலை உள்துறை அமைச்சர் Bruno Retailleau தெரிவித்தார். அத்தோடு இதனை பிரதமர் பிரான்சுவா பெய்ரூவுக்கும் முன்மொழிந்து, வரவுசெலவுத்திட்டத்தோடு இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் கோரியதாக தெரிவித்தார்.
AME என்பது "Aide Médicale de l'État" எனும் மருத்துவ உதவியாகும். இந்த திட்டம் மூலம் பிரெஞ்சு மக்கள் மருத்துவச் செலவீனங்களுக்கான காப்பீடுகளை பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக பிரெஞ்சு மக்கள் அல்லாத வெளிநாட்டு அகதிகள், தஞ்சக்கோரிக்கையாளர்கள் போன்றவர்களுக்கு உதவும் பொருட்டு அரசு இதனை செயற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், நாட்டை விட்டு வெளியேற பணிக்கப்பட்ட ஒருவர் இனிமேல் இந்த AME இனை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.