வனிதா இளையராஜா வீட்டு மருமகளா போக வேண்டியவரா?

12 ஆடி 2025 சனி 17:21 | பார்வைகள் : 252
சினிமாவில் ஹீரோயினாக நடித்து பிரபலமானதை விட சர்ச்சைகளின் மூலம் தான் அதிகளவில் பிரபலமானார் வனிதா விஜயகுமார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட பின்னர் தான் வனிதாவுக்கு சினிமாவில் திருப்புமுனை கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வனிதாவுக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்தன. நடிகையாக பல்வேறு படங்களில் கலக்கி வந்த வனிதா, இயக்குனராக அவதாரம் எடுத்த படம் தான் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி இதில் நாயகியாகவும் நடித்திருந்தார் வனிதா. இப்படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா தான் தயாரித்திருந்தார்.
மிஸஸ் அண்ட் மிஸ்டர் ஒரு அடல்ட் காமெடி திரைப்படமாக உருவானது. இதில் வனிதாவுக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்திருந்தார். இதுதவிர ஷகீலா, கிரண், ஆர்த்தி, கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் ஜூலை 11ந் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார். இருப்பினும் இதில் மைக்கேல் மதன காமராஜன் படத்திற்காக இளையராஜா இசையமைத்த சிவராத்திரி என்கிற பாடலும் பயன்படுத்தப்பட்டு இருந்தது. அப்பாடலுக்காக தாங்கள் முறையே அனுமதி வாங்கிவிட்டதாக வனிதா பேட்டிகளிலும் கூறி இருந்தார்.
இந்த நிலையில், தன்னிடம் அனுமதி வாங்காமல் மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் தான் இசையமைத்த பாடல் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறி இசைஞானி இளையராஜா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது. வனிதா தாங்கள் முறையே அனுமதி வாங்கியதாக கூறியும் இளையராஜா ஏன் வழக்கு தொடர்ந்தார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது. நேற்று மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தை பார்க்க தியேட்டருக்கு வந்திருந்த வனிதாவிடம், இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
இதுபற்றி வனிதா கூறியதாவது : “இளையராஜாவை நேர்ல போய் பார்த்து அவரிடம் ஆசிர்வாதம் வாங்குனேன். அப்போது அவரிடம் சொன்னேன், அவரும் அதற்கு ஓகே என்று தான் சொன்னார். பேட்டிகளில் கூட நான் சொல்லிருந்தேன். அவர் ஒரு லெஜண்ட். இசைக் கடவுள் மாதிரி அவர், கடவுளே நம்மிடம் கோபித்துக் கொண்டால் எவ்வளவு கஷ்டமா இருக்கும். சின்ன வயசுல இருந்து நான் அவரோட வீட்ல வளர்ந்திருக்கிறேன். சில விஷயம் பேச முடியாது. உண்மையை சொன்னால் தப்பாகிவிடும் என வனிதா கூற, நீங்க நேரில் பார்த்தாலும் அனுமதி கேட்கவில்லை என்று சொல்கிறார்கள் அதுபற்றி உங்கள் கருத்து என்ன என அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வியை முன்வைத்தனர்.
இதற்கு விளக்கம் அளித்த வனிதா, சோனி மியூசிக்கிடம் நாங்க ரைட்ஸ் வாங்கிருக்கிறோம். நான் மட்டுமல்ல குட் பேட் அக்லி, மஞ்சும்மல் பாய்ஸ் போன்ற படங்கள் மீதும் கேஸ் போட்டாங்க. மரியாதை கொடுத்து எங்கிட்ட வந்து கேட்டா நான் காசு கூட கேட்க மாட்டேன் அனுமதி கொடுத்திருவேன் என்று ராஜா ஒரு பேட்டியில் சொன்னார். நானும் அதை தான் செதேன். ஏன்னா, அந்த வீட்ல நான் பூஜை செய்திருக்கிறேன். இளையராஜா வீட்டில் லாக்கர் சாவியை ஜீவா அம்மா கையில் இருந்து வாங்கி நகையை எடுத்து அம்மனுக்கு போட்டு அவ்ளோ தூரம் அந்த வீட்டுக்கு உழைச்சிருக்கேன். அந்த குடும்பத்துல நான் ஒருத்தி... மருமகளா போக வேண்டியவங்க; இதுக்குமேல எதுவும் சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டு பேட்டியின் இடையிலேயே கிளம்பிய வனிதா, காரில் ஏறிய பின்னர் பேசுகையில், நிறைய ஃபேமிலி பிராப்ளம் இருக்குங்க. அதுனால தான் வேண்டுமென்றே அவர் கேஸ் போட்டிருக்கிறார். நான் அந்த வீட்டு மருமகளா போக வேண்டியது. அதிலிருந்தே பிரச்சனை தான் என வனிதா கூறி இருக்கிறார். அவரின் இந்த பேச்சு விவாதப் பொருளாக மாறி உள்ளது. வனிதா இளையராஜா வீட்டு மருமகளா போக வேண்டியவரா என நெட்டிசன்கள் ஷாக் ஆகி கமெண்ட் செய்து வருகிறார்கள்.