குழந்தைகளை திட்டுவது சரியா?

12 ஆடி 2025 சனி 16:21 | பார்வைகள் : 140
குழந்தைகளை நல்வழிப்படுத்த, கண்டித்து வளர்ப்பது பெற்றோருக்கு எளிதாக விஷயம் தான். ஆனால் இப்படி குழந்தைகளை திட்டுவது சரியா? பெரியவர்களுடன் ஒப்பிடும்போது, குழந்தைகள் வித்தியாசமான ஆற்றலை வெளிப்படுத்துகிறார்கள். பெரும்பாலான நேரங்களில், அவர்கள் சுறுசுறுப்பாகவும், விளையாட்டுத்தனமாகவும், அவர்கள் செய்யும் அனைத்தையும் ரசிக்கிறார்கள். பெற்றோர்களும் தங்கள் துடிப்பான குழந்தைகள் மகிழ்ச்சியான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதையும், விளையாடுவதையும், பேசுவதையும், கற்பனை செய்வதையும் பார்த்து மகிழ்கிறார்கள்.
இருப்பினும், பெற்றோர்கள் குழந்தையின் விளையாட்டுத்தனம் அல்லது தவறான நடத்தைக்கு அதிகமாக எதிர்வினையாற்றுகிறார்களோ எனத் தோன்றுகிறது. குறிப்பாக அவர்கள் வேலையில் மூழ்கி இருக்கும்போதோ, சோர்வாக இருக்கும்போது அல்லது உணர்ச்சி ரீதியாக தூண்டப்படும்போதோ அதிகமாக திட்டுகிறார்கள்.
அதற்கு பதிலாக, பெற்றோர்கள் பொறுமையாக இருந்து குழந்தையின் செயல்களுக்குப் பின்னால் உள்ள காரணத்தைப் புரிந்து கொள்ள முடிந்தால் எப்படியிருக்கும்? இதை சொல்வது எளிதாக இருக்கும்! ஆனால் ஒரு குழந்தையின் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ள, முதலில் பெற்றோர்கள் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
உதாரணமாக, நீங்கள் கோபமாக கத்தினால், அவர்களும் பதிலுக்கு கத்த கற்றுக்கொள்வார்கள்; நீங்கள் அவர்களைத் திட்டினால், அவர்கள் வேறு ஒருவரிடம் இவ்வாறே நடந்துகொள்வார்கள். உங்கள் குழந்தை உங்கள் நடத்தைகளையும் செயல்களையும் பின்பற்றியே வளரும் என்பதால், உங்கள் நடத்தைகளில் கூடுதல் கவனம் தேவை.
கோபமான வார்த்தைகளின் தாக்கம்
குழந்தைகளிடம் கடுமையான வார்த்தைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகத்திற்குச் சமமாகும். அவர்களிடம் கோபப்படுவதால் ஏற்படும் உளவியல் விளைவுகள் உடல் ரீதியான துஷ்பிரயோகத்தைப் போலவே மோசமானவை. எனவே, ஒரு பெற்றோராக, கோபமாக திட்டுவதால் ஏற்படும் உளவியல் விளைவுகளைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
தொடர்ந்து திட்டுவதால், குழந்தை அவமானப்படுகிறது; பயப்படுகிறது; குற்ற உணர்ச்சி அடைகிறது; வெட்கப்படுகிறது; பதட்டம் அடைகிறது. இது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இவை அனைத்தும் தாமதான வளர்ச்சி, தூக்கம் தொடர்பான பிரச்சனைகள், நடத்தை பிரச்சனைகள், கற்றல் பிரச்சனைகள் மற்றும் சமூக உறவுகளை உருவாக்குவதில் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
குழந்தைகளை திட்டுவது பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்:
கட்டுக்கதை: பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒருபோதும் கொடுமைப்படுத்துவதில்லை
உண்மை: பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தொடர்ந்து திட்டும்போது அல்லது அடிக்கும்போது உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறார்கள்.
கட்டுக்கதை: திட்டுவது குழந்தையை ஒழுங்குபடுத்த உதவும்.
உண்மை: இது ஒழுக்கத்தை ஏற்படுத்தாது. மாறாக, உணர்ச்சி ரீதியான துயரத்தையும் நடத்தைப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும்.
கட்டுக்கதை: பொது இடங்களில் உங்கள் குழந்தையைத் திட்டினால் அவர்கள் உங்கள் பேச்சைக் கேட்கக்கூடும்.
உண்மை: இது உங்கள் குழந்தையை அவமானமாகவும் சங்கடமாகவும் உணர வைக்கிறது.
கட்டுக்கதை: உங்கள் குழந்தையைத் திட்டுவது அவர்களை உண்மையைச் சொல்ல வைக்கும்.
உண்மை: இது அவர்களை உண்மையை மறைக்கவும், பிடிபடாமல் இருக்க வழிகளைக் கண்டறியவும் வழிவகுக்கும்.
கட்டுக்கதை: நல்ல பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் நடத்தையைப் பார்த்து எரிச்சலடையவோ அல்லது கோபப்படவோ மாட்டார்கள்.
உண்மை: சில சமயங்களில், எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தையின் நடத்தையால் எரிச்சலடைகிறார்கள். கோபப்படுகிறார்கள். ஆனால் கோபத்தில் குழந்தையை காயப்படுத்துவது தவறு.
பெற்றோர்-குழந்தை இடையே அன்பான மற்றும் நம்பகமான உறவு இருக்கும்போது, அந்தக் குழந்தை நேர்மறையான நடத்தைகளைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது.
உங்கள் குழந்தையை அமைதியாகவும் இனிமையாகவும் எழுப்புங்கள். இது அவர்களுக்கு அன்றைய நாளில் நல்ல தொடக்கத்தைத் தரும்.
உங்கள் பிள்ளைகளை வீட்டு வேலைகளில் உதவ ஊக்குவித்து, அவர்களின் முயற்சிகளைப் பாராட்டவும்.
உணவு நேரத்தை இனிமையாக்குங்கள். குடும்ப பிணைப்புக்கு இது ஒரு நல்ல நேரம்.
கடுமையான மற்றும் புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். அதற்கு பதிலாக, நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தவும்.