கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானம்

10 ஆடி 2025 வியாழன் 14:17 | பார்வைகள் : 127
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
லீட்ஸில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்தும், பிர்மிங்காமில் நடைபெற்ற 2வது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள 3வது டெஸ்ட் போட்டியில், வெற்றி பெற இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகிறது.
இந்த மைதானத்தில், கிரிக்கெட் விளையாடுவதை வீரர்கள் கௌரவமாக கருதுகிறார்கள். இந்த மைதானத்தில் அமர்ந்து, போட்டியை பார்ப்பதை ரசிகர்கள் பெருமையாக கருதுகிறார்கள்.
இந்த லார்ட்ஸ் மைதானம் கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்படுகிறது. அதற்கான சிறப்பம்சம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
லார்ட்ஸ் மைதானமே உலகின் முதல் கிரிக்கெட் மைதானம் என கருதப்படுகிறது. ஆனால், முதல் லார்ட்ஸ் மைதானம் தற்போதைய மைதானம் உள்ள இடத்தில் உருவாக்கப்படவில்லை.
முதன் முதலில், 1787ம் ஆண்டு இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ரீஜண்ட் பார்க்கில் உள்ள செயின்ட் மெர்ல்போனில்தான் தாமஸ் லார்ட் என்பவரால், முதன்முதலில் லார்ட்ஸ் மைதானம் உருவாக்கப்பட்டது. தற்போது அந்த இடம் டோர்செட் சதுக்கமாக உள்ளது.
1811 முதல் 1814 வரை தற்போதைய லார்ட்ஸ் மைதானத்திற்கு அருகே உள்ள செயிண்ட் ஜான்ஸ் வுட்டில் லார்ட்ஸ் மைதானம் செயல்பட்டது. தற்போது இந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு செயல்பட்டு வருகிறது.
1814 ஆம் ஆண்டு முதல், 211 ஆண்டுகளாக தற்போதைய லார்ட்ஸ் மைதானம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 31,000 பேர் அமர்ந்து போட்டியை காணலாம்.
இந்த மைதானமே உலகின் பழமையான செயல்பாட்டில் உள்ள கிரிக்கெட் மைதானம் ஆகும்.
2005 ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமையகம் லார்ட்ஸில்தான் செயல்பட்டு வந்தது. அதன் பின்னர், துபாய்க்கு மாற்றப்பட்டது.
கிரிக்கெட்டின் பழமையான அருங்காட்சியகம், லார்ட்ஸ் மைதானத்தில்தான் உள்ளது.
லார்ட்ஸ் மைதானத்தில் 1975, 1979, 1983, 1999, 2019 உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. 1993 மற்றும் 2017 ஆம் ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளும் இங்கு நடைபெற்றுள்ளது.
இந்திய அணி, 1983 ஆம் ஆண்டு முதல்முறையாக உலகக்கோப்பையை வென்றதும் இந்த மைதானத்தில் தான்.
லார்ட்ஸில், இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் திலீப் வெங்சர்க்கார், தொடர்ச்சியாக 3 சதங்கள் அடித்தார். இதுவரை அந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை.
லார்ட்ஸ் மைதானத்தில், மணி அடித்து போட்டியை தொடங்கும் நடைமுறை தற்போதும் பின்பற்றப்படுகிறது.
பிராட்மேன் தொடங்கி, சச்சின், விராட் கோலி உள்ளிட்ட பல்வேறு ஜாம்பவான்கள் லார்ட்ஸில் விளையாடியுள்ளனர்.
2002 ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றதும், சவுரவ் கங்குலி டிஷர்ட்டை கழற்றி சுற்றியது இன்றளவும் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாது.