Paristamil Navigation Paristamil advert login

மெக்னீசியத்தின் முக்கியத்துவம் பற்றி தெரியுமா ?

மெக்னீசியத்தின்  முக்கியத்துவம் பற்றி தெரியுமா ?

6 ஆடி 2025 ஞாயிறு 14:28 | பார்வைகள் : 483


நமது உணவில் காணப்படும் ஒரு முக்கிய நுண் ஊட்டச்சத்தாக மெக்னீசியம் விளங்கி வருகிறது. இது உடலுக்குத் தேவையான அத்தியாவசிய கனிமமாகும். இது 300க்கும் மேற்பட்ட உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் தூக்க ஒழுங்கு முறையும் அடங்கும். சரியான தூக்கம் வர மெக்னீசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. மெக்னீசியம் மூளையில் உள்ள காமா அமினோ பியூட்டிக் அமில ஏற்பிகளை செயல்படுத்துகிறது. இது ஒரு நியூரோட்ரான்ஸ்மிட்டர் ஆகும். இது மூளையின் செயல்பாட்டை குறைத்து, நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி தூக்கத்திற்கு தயார் செய்கிறது.

மேலும் மெக்னீசியம் மன அழுத்த ஹார்மோன்களான கார்டிசோல் போன்றவற்றின் அளவை குறைப்பதால் மன அழுத்தம், பதட்டம் தணிக்கிறது. இதன் காரணமாக தூக்கம் எளிதாக வருகிறது. மெக்னீசியம் தசை சுருக்கங்கள் மற்றும் தசைகளை தளர்வு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக இரவு நேர தசை பிடிப்புகள் அல்லது ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சின்ட்ரோம் போன்ற தூக்கத்தை கெடுக்கும் பிரச்சனைகளை குறைக்கிறது. மேலும் தூக்க சுழற்சியை கட்டுப்படுத்தும் ஹார்மோனான மெலடோனின் உற்பத்தியை குறைப்பதிலும் மெக்னீசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக எளிதில் தூக்கம் நம்மை வந்தடைகிறது. இதுமட்டுமல்லாமல் வைட்டமின் டி யை நம் உடல் உறிஞ்சப்படுவதிலும், அதன் செயல்பாடுகள் சரியாக நடைபெறுவதையும் மெக்னீசியம் உறுதி செய்கிறது.

மெக்னீசியம் நம் உடலுக்கு கிடைக்க வேண்டுமானால் மெக்னீசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கீரைகள், பிரக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற பச்சை காய்கறிகளிலும், பாதாம், முந்திரி, பூசணி விதைகள், சியா விதைகள், சூரியகாந்தி விதைகள், ஆளி விதைகள் ஆகியவற்றிலும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. பயிறு வகைகளான சுண்டல், பீன்ஸ் ஆகியவற்றிலும் மெக்னீசியம் உள்ளது. இது மட்டுமல்லாமல் பழுப்பு அரிசி, முழு கோதுமை, ஓட்ஸ் ஆகியவையும் மெக்னீசியத்திற்கான நல்ல ஆதாரங்களாக உள்ளது. குறைந்தது 70% கோக்கோ கொண்டுள்ள டார்க் சாக்லேட்டில் மெக்னீசியம் கணிசமான அளவு உள்ளது. அவகேடோ, வாழைப்பழம் ஆகிய பழங்களிலும், சால்மன் மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களுடன் மெக்னீசியமும் நிறைந்துள்ளது.

மெக்னீசியம் உடலுக்கு மட்டுமல்லாமல் மூளையின் வளர்ச்சிதை மாற்றத்தையும் ஒழுங்கு படுத்துகிறது. மூளை திசுக்களையும் சரியாக செயல்படுத்த உதவுகிறது. வயதாகும்போது ஏற்படும் மூளை சம்பந்தப்பட்ட கோளாறுகளை குறைப்பதில் மெக்னீசியம் முக்கிய பங்காற்றுகிறது. மனதை ஒழுங்கு படுத்துவதிலும் மெக்னீசியத்திற்கு முக்கிய பங்கு உண்டு. 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் போதுமான மெக்னீசியம் உட்கொண்டவர்களுக்கு தூக்கத்தின் தரம் மேம்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 9000-க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட மற்றொரு பகுப்பாய்வில் அதிக மெக்னீசியம் உட்கொள்ளும் நபர்களுக்கு வளர்ச்சிதை மாற்ற நோய்களான நீரிழிவு அல்லது இதய நோய்களின் ஆபத்துகள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.

மெக்னீசியம் பெரும்பாலும் உணவு மூலமாகவே நம் உடலுக்கு கிடைத்துவிடும். ஆனால் சரியான உணவு முறை பழக்கம் இல்லாதவர்களுக்கு சப்ளிமெண்ட்ஸ் ஆக மருத்துவர்கள் பரிந்துரைப்பர். மருத்துவரை கலந்தாலோசிக்காமல் மெக்னீசியத்தை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் சில பக்க விளைவுகள் ஏற்படலாம். மெக்னீசியம் குறைபாடு தூக்க பிரச்சனைகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். தூக்கமின்மைக்கு வேறு பல காரணங்களும் இருக்கலாம். தொடர்ச்சியாக தூக்கப் பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும், ஆரோக்கியமான மற்றும் இயற்கையான முறையில் உங்களை வலுவாக்கவும் மெக்னீசியம் நிறைந்த உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்