தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா..

6 ஆடி 2025 ஞாயிறு 14:28 | பார்வைகள் : 643
முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தமிழில் ஹீரோவாக அறிமுகம் ஆக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தை ‘மான் கராத்தே’, ’ரெமோ’, ‘கெத்து ’ போன்ற படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றிய லோகன் இயக்கும் புதிய படத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் அறிமுக விழாவில் இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஷிவம் டூபே கலந்துகொண்டார்.
இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சந்தீப் கே.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பை கவனிக்கிறார்.
இந்த விழாவில் கலந்துகொண்டு எடிட்டர் மோகன், இயக்குநர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன், நடிகர் சதீஷ், இயக்குநர் விஜய் மில்டன், இயக்குநர் திருக்குமரன், இயக்குநர் பக்யராஜ் கண்ணன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.
“இத்தனை திறமைமிக்க அணி மற்றும் ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் போன்ற உறுதியான ஆதரவு கொண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் என் இயக்குநர் பயணத்தைத் தொடங்குவது ஒரு கனவு நனவாகும் தருணம்,” என இயக்குநர் லோகன் உருக்கமாக தெரிவித்தார்.