ஆய்வகத்தில் மனித விந்தணு, கருமுட்டை உருவாக்க முடியும் - விஞ்ஞானிகள் ஆச்சரியம்

6 ஆடி 2025 ஞாயிறு 13:01 | பார்வைகள் : 730
மனித முடி செல்களிலிருந்து விந்தணு, கருமுட்டை உருவாக்க முடியும் நாள் நெருங்கிவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மனித தோல் அல்லது இரத்தச் செல்களை விந்தணு மற்றும் கருமுட்டைகளாக மாற்றும் தொழில்நுட்பமான In-Vitro Gametogenesis (IVG) முறையில், விஞ்ஞானிகள் அசாதாரண முன்னேற்றத்தை கண்டுள்ளனர்.
ஜப்பான் ஒசாகா பல்கலைக்கழகத்தை சேர்ந்த Prof. Katsuhiko Hayashi தலைமையிலான குழுவினர், "இன்னும் ஏழு ஆண்டுகளில்" இந்த தொழில்நுட்பம் செயல்படும் நிலைக்கு வந்துவிடும் என தெரிவிக்கின்றனர்.
இந்த முறையில், தோல் செல்கள் முதலில் ஸ்டெம் செல்களாக மாற்றப்பட்டு, பின்னர் கருவுறுப்பு போன்ற அமைப்புகளில் வளர்த்தல் மூலம் விந்தணு அல்லது கருமுட்டை வடிவத்தில் வளர்க்கப்படுகிறது.
எலிகளுக்கு ஏற்கனவே இதன் மூலம் "இரண்டு தந்தைகள்" கொண்ட பிள்ளைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஹயாஷி தெரிவித்தார்.
அமெரிக்காவின் Conception Biosciences நிறுவனம், இந்த துறையில் மிக முக்கிய முன்னேற்றங்களை நிகழ்த்தி வருவதையும், அதில் OpenAI நிறுவனர் சாம் ஆல்ட்மேன் முதலீடு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தொழில்நுட்பம் வயதான பெண்கள், குழந்தை இல்லாத தம்பதிகள், மற்றும் ஒரே பாலினத்தினர் போன்றோருக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
ஆனால் இது இன்னும் பரிசோதனை நிலையில் உள்ளதால், இதன் பாதுகாப்பு, எதிர்விளைவுகள் மற்றும் நெறிமுறை தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
"செயற்கை முறையில் குழந்தை உருவாக்கம் சாத்தியமாகும். ஆனால் இது மிகவும் பொறுப்புடன் அணுகப்பட வேண்டிய விஷயம்” என்று ஹயாஷி எச்சரிக்கிறார்.