உக்ரைன் மீது 550 ட்ரோன்கள், 11 ஏவுகணைகளால் ரஷ்யா தாக்குதல்

5 ஆடி 2025 சனி 15:22 | பார்வைகள் : 191
உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவிற்கு, 550 ட்ரோன்கள், 11 ஏவுகணைகள் பயன்படுத்தி ரஷ்ய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 30இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
உக்ரைன்-ரஷ்யா இடையே 3 வருடங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இந்த போரை நிறுத்துவதற்காக கடும் முயற்சிகள் செய்து வருகிறார்.
இது தொடர்பாக துருக்கியில் இரு நாட்டு முக்கிய பிரதிநிதிகள் இடையே 2 முறை கலந்துரையாடல் இடம்பெற்றது.
இருப்பினும் போர் நிறுத்தம் ஏற்படவில்லை, மாறாக போர் தீவிரம் அடைந்துவருகிறது.
இந்த நிலையில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவில் ரஷ்யா அதிகப்படியான ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது நீண்ட தூர ஏவுகணை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
முக்கியமாக கீவ், சுமி, கார்கிவ், நிப்ரோபெட்ரோவ்ஸ்க், செர்னிகிவப் ஆகிய நகரங்களை இலக்காக கொண்டு நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாமல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரவு முழுவதும் 550 ட்ரோன்கள் மற்றும் 11 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக உக்ரைன் கூறி உள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 23 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.