காசாவில் இடம்பெறும் இனப்படுகொலை - ஐநாவின் விசேட அறிக்கையாளர் அறிக்கை

4 ஆடி 2025 வெள்ளி 12:09 | பார்வைகள் : 210
காசாவில் இடம்பெறும் இனப்படுகொலை காரணமாக சர்வதேச நிறுவனங்கள் பெருமளவு இலாபத்தை சம்பாதிக்கின்றன என ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனபகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐநாவின் விசேட அறிக்கையாளர் தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளதுடன் இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் அந்த நாட்டிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை தடை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐநாவின் அறிக்கையாளர் பிரான்சிஸ்கா அல்பெனிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை கடந்த 21 மாதங்களாக இஸ்ரேல் காசா மீதான தாக்குதலிற்கு சர்வதேச நிறுவனங்கள் முழுமையாக ஆதரவளிப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
அரசியல் தலைவர்களும் தலைமைகளும் தங்கள் கடமைகளை தட்டிக்கழிக்கும் அதேவேளை இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு , இனவெறி மற்றும் தற்போதைய இனப்படுகொலை ஆகியவற்றின் மூலம் பெருநிறுவனங்கள் பலத்த இலாபத்தை ஈட்டியுள்ளன என ஐநாவின் அறிக்கையாளரின் விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை இந்த விடயத்தின் சிறுபகுதியை மாத்திரமே அம்பலப்படுத்தியுள்ளது தனியார் துறையை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தாமல் இதனை தடுத்து நிறுத்த முடியாது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லொக்ஹீட் மார்ட்டின் தயாரித்த எவ் 35 போர் விமானத்திற்கான மிகப்பெரிய பாதுகாப்பு கொள்வனவு மூலம் இஸ்ரேலிய இராணுவம் பயனடைந்துள்ளது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ள ஐநா அறிக்கையாளர் ஒரேநேரத்தில்1800 குண்டுகளை கொண்டு செல்லும் மிருகத்தனமான முறையில் முதன் முதலில் இந்த விமானத்தை இஸ்ரேலே பயன்படுத்தியது என தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிப்புப் பொருளாதாரத்திலிருந்து இனப்படுகொலைப் பொருளாதாரம் வரை" என்ற தலைப்பில் சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கை அமைந்துள்ளது. காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனிய சுற்றுப்புறங்களை அழிக்கப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் கனரக இயந்திரங்களை வழங்குவதில் சர்வதேச நிறுவன ஈடுபாடு சட்டவிரோத குடியேற்றங்களிலிருந்து விளைபொருட்களை விற்கும் விவசாய நிறுவனங்கள் மற்றும் போருக்கு நிதியளிக்க உதவும் முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றை இது ஆராய்கிறது.