இரட்டை சதம் விளாசிய சுப்மன் கில் - சச்சின், கோலியின் சாதனை முறியடிப்பு

4 ஆடி 2025 வெள்ளி 10:09 | பார்வைகள் : 121
இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசியதன் மூலம், சுப்மன் கில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், 2வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 10 விக்கெட்களை இழந்து 587 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக, இந்திய அணித்தலைவர் சுப்மன் கில் இரட்டை சதம்(269) அடித்தார்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட்களை இழந்து, 77 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இரட்டை சதம் மூலம், சுப்மன் கில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
SENA நாடுகளில் இரட்டை சதம் விளாசிய முதல் ஆசிய அணித்தலைவர் என்ற பெருமை சுப்மன் கில் பெற்றார்.
மேலும், இது டெஸ்ட் போட்டிகளில் ஒரு இந்திய அணித்தலைவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். முன்னதாக 2019 ஆம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், விராட் கோலி 254 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
மேலும், ஆசியாவிற்கு வெளியே டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 2004 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் சச்சின் டெண்டுல்கர் 241 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த வீரர்கள் என்ற பட்டியலில் கில் 5வது வீரராக இணைந்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், ரோஹித் சர்மா மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர்.
வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில், இந்திய வீரர் எடுத்த 3வது அதிகபட்ச ஓட்டம் இதுவாகும். முன்னதாக சேவாக் (309) டிராவிட் (270) குவிந்திருந்தனர்.