அரேபிய வளைகுடாவில் கண்ணிவெடிகளை நிரப்ப தயாரான ஈரான்

3 ஆடி 2025 வியாழன் 08:03 | பார்வைகள் : 299
இஸ்ரேல் தொடுத்த தாக்குதலை அடுத்து அரேபிய வளைகுடாவில் கண்ணிவெடிகளை நிரப்ப ஈரான் தயாரானதாக அமெரிக்கா தற்போது தகவல் வெளியிட்டுள்ளது.
ஈரான் முழுவதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட ஈரான் தயாராகி வந்தது. ஜூன் 13 அன்று இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக தனது முதல் ஏவுகணைத் தாக்குதலை நடத்திய சிறிது நேரத்திற்குப் பிறகு, அமெரிக்க உளவுத்துறையால் இவை கண்டறியப்பட்டன.
கண்ணிவெடிகளுடன் ஈரான் தயாரானது, உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் பாதைகளில் ஒன்றை மூடுவதில் ஈரான் தீவிரமாக இருந்திருக்கலாம் என்றே தற்போது அமெரிக்க அதிகாரிகள் தரப்பு விளக்கமளித்துள்ளது.
ஆனால் அப்படியான ஒரு முடிவுக்கு ஈரான் வந்திருக்கும் என்றால், நிலைமை இன்னும் மோசமடைந்திருக்கும் என்றே கூறுகின்றனர். உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக முன்னெடுக்கப்படுகிறது.
அப்படியான ஒரு ஜலசந்தியை முடக்குவதால் உலக அளவில் எரிவாயு மற்றும் எண்ணெய் விலைகளை உயர்த்தியிருக்கும். ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதிலிருந்து, உலகளாவிய எண்ணெய் விலைகள் 10 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சி கண்டது.
ஆனால், இந்த நெருக்கடி நிலை எண்ணெய் வர்த்தகத்தை பாதிக்கவில்லை என்பதால் இழப்பேதும் பதிவாகவில்லை. ஜூன் 22 அன்று, ஈரானின் அணுசக்தி திட்டத்தை முடக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்களை குண்டுவீசித் தாக்கிய சிறிது நேரத்திலேயே, ஈரானின் பாராளுமன்றம் ஜலசந்தியை முடக்கும் நடவடிக்கையை ஆதரித்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் இறுதி முடிவை எடுப்பது ஈரானின் உயர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் பொறுப்பாகும். தங்களுக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் ஈரான் பல ஆண்டுகளாக ஜலசந்தியை மூடுவதாக மிரட்டி வருகிறது, ஆனால் அந்த அச்சுறுத்தலை ஒருபோதும் பின்பற்றியதில்லை.
ஓமன் மற்றும் ஈரான் இடையே அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி, அரேபிய வளைகுடாவை தெற்கே ஓமன் வளைகுடாவுடனும், அதற்கு அப்பால் அரேபிய கடலுடனும் இணைக்கிறது.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் ஈராக் ஆகிய OPEC உறுப்பு நாடுகள் தங்கள் கச்சா எண்ணெயின் பெரும்பகுதியை இந்த ஜலசந்தி வழியாக, முக்கியமாக ஆசியாவிற்கு ஏற்றுமதி செய்கின்றன.
உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதியாளர்களில் ஒன்றான கத்தார், அதன் அனைத்து திரவ இயற்கை எரிவாயுவையும் இந்த ஜலசந்தி வழியாக அனுப்புகிறது.
ஈரான் தனது பெரும்பாலான கச்சா எண்ணெயை இந்தப் பாதை வழியாக ஏற்றுமதி செய்கிறது, இதனால் ஜலசந்தியை மூடுவதற்கான ஈரானின் மிரட்டலைக் கட்டுப்படுத்துகிறது. ஆயினும்கூட, ஈரான் அவசியம் என்று கருதினால் அவ்வாறு செய்ய முடியும் என்பதை உறுதி செய்துள்ளது.