டொரோண்டோவில் மீண்டும் அதிகரிக்கும் வெப்பம்

3 ஆடி 2025 வியாழன் 05:52 | பார்வைகள் : 222
டொரோண்டோவில் அதிகபட்சமாக 30 பாகை செல்சியஸ் வரை வெப்பம் இருக்கலாம் என கானடாவின் தேசிய வானிலை நிலையமான சுற்றாடல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஆனால் ஈரப்பதம் காரணமாக உணரப்படும் வெப்பநிலை 35 பாகை செல்சியஸ் வரை உயரக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மழையில்லா சூரிய ஒளியுடன் தொடங்கி, மதியம் 1 மணிக்கு புறஊதாக்கதிர் குறியீடு 9 ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது “மிகவும் அதிகம்” என வகைப்படுத்தப்படுகிறது, எனவே பொதுமக்கள் சூரியக் கதிர்வீச்சில் இருந்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
மதியம் தொடக்கம் மேகங்கள் கூடத் தொடங்கும் எனவும், 30% மழை வீழ்ச்சிக்கான வாய்ப்பு மற்றும் இடியுடன் கூடிய மழை ஏற்படும் சாத்தியம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெப்பநிலை சற்று குறையும். அதாவது, வெள்ளிக்கிழமை 26 பாகை செல்சியஸ் மற்றும் வியாழன் 27 பாகை செல்சியஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், வார இறுதியில் வெப்பம் மீண்டும் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெப்பநிலை 30 பாகை செல்சியஸ் வரை எட்டும் என தெரிகிறது. இரு நாட்களிலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு 30 வீதமாக காணப்படுகின்றது என எதிர்வுகூறப்பட்டுள்ளது.