Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

போர் விமானத்தை விட்டு நகர மறுத்த பிரிட்டிஷ் பைலட்: திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் சம்பவம்!

போர் விமானத்தை விட்டு நகர மறுத்த பிரிட்டிஷ் பைலட்: திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் சம்பவம்!

16 ஆனி 2025 திங்கள் 17:54 | பார்வைகள் : 2005


எரிபொருள் தீர்ந்து போனதால், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய பிரிட்டிஷ் போர் விமானத்தின் பைலட், 'இங்கேயே தான் இருப்பேன்' என்று விடாப்பிடியாக, விமானம் அருகிலேயே நாற்காலி போட்டு அமர்ந்திருந்திருந்தார்.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு;

கடற்கொள்ளையர் நடமாட்டத்தை கண்காணிக்கவும், வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் அமைதியின்மையை கருத்தில் கொண்டும், மேற்கத்திய நாடுகளின் போர்க்கப்பல்கள் அரபிக்கடலில் ரோந்து வருகின்றன. கடந்த சனிக்கிழமை இவ்வாறு பிரிட்டீஷ் போர்க்கப்பலில் இருந்து ரோந்து கிளம்பிய எப் 35 பி போர் விமானத்தில், ஒரு கட்டத்தில் எரிபொருள் தீர்ந்து போனது.

மீண்டும் கப்பலுக்கு செல்வதற்கு போதுமான எரிபொருள் இல்லை என்பதை உணர்ந்த விமானி, அருகே உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்க அனுமதி கேட்டார். இந்திய அரசும், அனுமதி அளித்தது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளும் அனுமதி அளித்தனர்.

இதையடுத்து, அந்த பிரிட்டிஷ் போர் விமானம், உடனடியாக அங்கு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. அதில் இருந்து விமானி மைக் என்பவர் கீழே இறங்கினார். ஆனால், விமானத்தை விட்டு வேறு எங்கும் நகர மறுத்தார்.விமான நிலையத்துக்கு உள்ளே வரும்படியும், சட்டபூர்வமான சில நடைமுறைகள் உள்ளன என்றும் விமான நிலைய அதிகாரிகள் அழைத்தனர். ஆனால், அவர் வர மறுத்து விட்டார். தனக்கு ஒரு நாற்காலி மட்டும் போதும் என்று கேட்டார். வேறு வழியில்லாத அதிகாரிகள், அவருக்கு ஒரு நாற்காலியை கொடுத்தனர்.அதை வாங்கி, விமானத்துக்கு அருகில் போட்டு அமர்ந்து கொண்டார் அந்த பிரிட்டீஷ் விமானி.

இது பற்றி மத்திய அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இப்படியே பல மணி நேரம், விமானம் அருகிலேயே நாற்காலியில் அமர்ந்திருந்தார். அதன்பின், அவரது உயர் அதிகாரிகள், அவரை சட்டபூர்வமான நடைமுறைகளை பூர்த்தி செய்யும்படி அறிவுறுத்தினர். அதன் பிறகே அவர், அங்கிருந்து எழுந்து திருவனந்தபுரம் விமான நிலையத்துக்குள் சென்றார்.

பிரிட்டனில் இருந்து வந்த அந்த வகை போர் விமானம், குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே உள்ளது. இந்தியாவில் இல்லை. அதில் இருக்கும் ஆயுதங்கள், தொழில்நுட்ப ரகசியங்கள் வெளியில் போய் விடக்கூடாது என்ற எண்ணத்தில் விமானி அவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவம் தற்போது பெரும்பான்மையோருக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து இந்திய விமானப்படை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

இந்த சம்பவத்தை நாங்கள் முன்னரே அறிந்துள்ளோம். பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமாக பிரிட்டிஷ் போர் விமானத்தை தரையிறங்க அனுமதித்தோம். F -35B போர் விமானம் தரையிறங்கியது ஒரு சாதாரண சம்பவமே.

தேவையான அனைத்து உதவிகளும் இந்திய விமானப்படையால் ஒருங்கிணைந்த முறையில் செய்து தரப்பட்டன. போர் விமானத்துக்கு தேவையான எரிபொருள், விமான நிலைய நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

வர்த்தக‌ விளம்பரங்கள்