2027 மார்ச்சில் மக்கள் தொகை கணக்கெடுப்பு; அரசாணையை கெஜட்டில் வெளியிட்டது மத்திய அரசு
16 ஆனி 2025 திங்கள் 13:51 | பார்வைகள் : 2218
வரும் 2027ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என்பதற்கான அரசாணை, இன்று மத்திய அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டது.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக, 2011ல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்ததாக, 2021ல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக கடந்த 2019ம் ஆண்டில் 8,754 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டை, 3,941 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.ஆனால், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, சென்சஸ் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த சூழ்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் வெளிப்படையான ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அமைச்சரவை ஏப்ரலில் ஒப்புதல் அளித்தது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணியும், 2027 மார்ச் 1ல் துவங்கும் என கடந்த 4ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதற்கான அரசாணை, வரும் 16ம் தேதி வெளியிடப்படும். எனினும், பனிப்பொழிவால் பாதிக்கப்படும் ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், லடாக் மாநிலங்களில் முதல் கட்டமாக 2026, அக்டோபர் 1ம் தேதியே கணக்கெடுப்பு பணி துவங்கும். நாட்டின் மற்ற மாநிலங்களில் இந்த வேலைகள் 2027, மார்ச் 1ல் துவங்கும், என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வரும் 2027ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என்பதற்கான அரசாணை, இன்று மத்திய அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டது.
இது குறித்து நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். முதல்முறையாக, இந்த கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 34 லட்சம் அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மற்றும் 1.3 லட்சம் பேர், அதிநவீன மொபைல் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி இந்த பணியை மேற்கொள்வார்கள், எனக் குறிப்பிட்டிருந்தார்.

























Bons Plans
Annuaire
Scan