தீயணைப்பதை பார்க்கும் வினோத ஆசை - சொந்த வீட்டிற்கே தீ வைத்த நபர்

8 வைகாசி 2025 வியாழன் 20:23 | பார்வைகள் : 110
வினோத ஆசையால், பிரித்தானியாவை சேர்ந்த நபர் தனது சொந்த வீட்டிற்கே இரு முறை தீ வைத்துள்ளார்.
பிரித்தானியாவின் நார்தம்பர்லேண்டைச் சேர்ந்தவர் 26 வயதான ஜேம்ஸ் பிரவுன்.
இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு மாலை, ஆஷிங்டனில் உள்ள லெவன்த் அவென்யூவில் உள்ள தனது வீட்டில், தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அவசர சேவைக்கு அழைத்துள்ளார்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அலமாரியில் ஏற்பட்டிருந்த தீயை அணைத்தனர்.
மின்சார மீட்டர் மூலம் தீ விபத்து ஏற்பட்டது என ஜேம்ஸ் பிரவுன் தெரிவித்ததால், தீயணைப்பு வீரர்கள் மின்சார இணைப்பை துண்டித்து விட்டு சென்றனர்.
90 நிமிடங்களுக்குப் பிறகு, மீண்டும் அவசர சேவையை அழைத்த பிரவுன், தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார். இந்த முறை, தீயணைப்புப் படையினர் திரும்பி வந்து பார்த்தபோது, படுக்கைகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன.
பிரவுனிடம் விசாரித்தபோது, மின் மீட்டர்தான் காரணம் என மீண்டும் கூறினார்.
முந்தைய வருகையின் போதே மின்சாரத்தை துண்டித்து விட்டு சென்றதால், அவரின் பதில் தீயணைப்பு வீரர்களுக்கு சந்தேகங்களை எழுப்பியது.
மேலும், தீயணைப்பு வீரர்கள் அவரின் வீட்டில் இருக்கும் போது, அவர் உற்சாகமாக இருப்பதை கவனித்துள்ளார். அதன் பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், தானே தீ வைத்ததை ஒப்பு கொண்டார்.
மேலும், கடந்த ஒரு வருடத்தில், தீ விபத்து என கூறி, 80 முறைக்கு மேல் தீயணைப்பு துறையை அழைத்தது தெரிய வந்தது. அவர் தீயணைப்பு வீரராக ஆசைப்பட்டதாகவும், அது நடக்காத நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதை பார்க்கும் ஆசை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இவ்வாறு நடந்து கொண்டுள்ளார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் தீர்ப்பின் பொது பேசிய நீதிபதி, "உங்கள் முதன்மை ஆர்வம் தீ வைப்பதற்கு பதிலாக தீயணைப்பு சேவையைத் தொடர்புகொள்வதாகத் தெரிகிறது.
நீங்கள் தீயணைப்புப் படையின் வளங்களை வீணாக்குகிறீர்கள், இது உயிர்கள் ஆபத்தில் இருக்கும் மிக முக்கியமான விஷயங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். நீங்கள் ஒரு பாடம் கற்றுக்கொண்டீர்கள் என்று நம்புகிறேன்" என் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, 8 மாதங்களுக்கு சிறைத்தண்டனை விதித்ததோடு, இரண்டு ஆண்டுகளுக்கு 150 மணிநேர ஊதியம் இல்லாத வேலை செய்யுமாறு உத்தரவிட்டார்.
தற்போது அவரின் செயலுக்கு அவர் வருந்துவதாகவும், கைது செய்யப்பட்டதிலிருந்து அவர் தீயணைப்புத் துறையைத் தொடர்புகொள்வதைத் தவிர்த்து வருவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.