சூப்பர்ஸ்டார் சினிமாவை விட்டு விலகுகிறாரா ?

5 வைகாசி 2025 திங்கள் 09:42 | பார்வைகள் : 171
தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவருக்கு தற்போது 74 வயது ஆகிறது. இந்த வயதிலும் பிசியான நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த், தற்போது கூலி, ஜெயிலர் 2 என இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்த இரண்டு படங்களுமே பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி வருகின்றன. இந்த இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.
ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரஜினி உடன் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், அமீர்கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது கூலி படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுதவிர ரஜினிகாந்த் கைவசம் உள்ள மற்றொரு திரைப்படமான ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இதில் ரஜினிகாந்த் உடன் ரம்யா கிருஷ்ணன், மிர்னா, மோகன்லால், ஷிவராஜ்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இதுதவிர தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவும் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார்.
இப்படி 74 வயதிலும் சினிமாவில் பிசியாக நடித்து வரும் ரஜினிகாந்த், ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்த பின்னர் சினிமாவில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், ரஜினிகாந்தின் மனைவி லதா இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுபற்றி சமீபத்திய பேட்டியில் அவர் கூறுகையில், எனக்கு தெரிந்தால் சொல்லலாம், இன்னும் அதைப்பற்றி அவர் யோசிக்கவே இல்லை என கூறி உள்ளார்.