‘டூரிஸ்ட் ஃபேமிலி' - வரவேற்பு பெற என்ன காரணம்..?

4 வைகாசி 2025 ஞாயிறு 19:00 | பார்வைகள் : 157
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் திரையரங்குகளில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. அப்படி திரைப்படத்தில் என்ன தான் சொல்கிறார்கள் விளக்குகிறது இந்த தொகுப்பு.
குடும்பம் குடும்பமாக டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு செல்கின்றனர் மக்கள். அரங்கம் நிறைந்த காட்சிகளாக படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படி குடும்பங்கள் கொண்டாடும் படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குநரான அபிஷன். திருச்சியைச் சேர்ந்த இவர், யாரிடமும் உதவி இயக்குநராக இல்லாமல் படத்தை எடுத்து ஜெயித்துள்ளார்.
விலைவாசி உயர்வால் இலங்கையில் இருந்து படகு மூலமாக சட்டவிரோதமாக இந்தியாவுக்கு ஒரு குடும்பம் வருவதாக தொடங்குகிறது டூரிஸ்ட் ஃபேமிலியின் கதை. இந்தியா வந்ததும், காவல்துறையிடம் சிக்கிக் கொள்ளும் அந்த குடும்பம், காவலராக நடித்திருக்கும் ரமேஷ் திலக்கின் இரக்கத்தால் விடுவிக்கப்படும் காட்சியில் இருந்து படம் டாப் கியரில் செல்கிறது.
காரில் இருந்து இறங்கி குப்பையை, குப்பைத் தொட்டியில் போட்டதற்காக, சசிகுமாரின் குடும்பத்தை தீவிரவாதிகளாக சந்தேகிக்கும் காட்சிகள் ரசிகர்களின் மனதில் பலவிதமான கேள்விகளை எழுப்புகிறது. ராமேஸ்வரத்தில் ஒரு வெடிகுண்டு வெடித்தற்கு சசிகுமார்தான் காரணம் என்று காவல்துறை அதிகாரி சந்தேகித்து, அவரை தேடத் தொடங்கும் காட்சிகள் படத்தின் விறுவிறுப்பை கூட்டுகின்றன.சக மனிதனின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையிலான ஒவ்வொரு காட்சியும் அப்லாஸை அள்ளுகின்றன. ஒரு குடும்பத்தில் நடப்பவற்றை திரைக்கதையாக கூறும்
யோகிபாபு, எம்.எஸ்பாஸ்கர், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி என படத்தில் நடித்த அனைவரும் வெகு இயல்பாக, கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர். ஸ்ரீஜா ரவி மரணமடையும் காட்சி கல்நெஞ்சம் படைத்தவர்களையும் கரைய வைத்துவிடும் வகையில் அமைந்துள்ளது. சசிகுமாரின் குடும்பத்தை காவலர்கள் தேடி வரும்போது, அவரை காப்பாற்ற அவர் வசிக்கும் பகுதியில் இருக்கும் மக்கள் அனைவரும் சேர்ந்து முயற்சிக்கும் காட்சிகள் முத்தாய்ப்பானவை.இந்தியாவுக்கு வந்ததும் வேலைக்காக சசிகுமார் எடுக்கும் முயற்சிகள், சசிகுமாரை அக்கம்பக்கத்தினர் அரவணைத்துக்கொள்வது என மனிதம்தான் அனைத்திலும் முதன்மையானது என்பதை நெற்றிப்பொட்டில் அடித்தது போல உணர வைக்கிறது டூரிஸ்ட் ஃபேமிலி.
சசிகுமாரின் மூத்த மகன் காதல் தோல்வியில் இருக்கும்போது, அவரின் இளையமகனாக முல்லி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் திரையரங்கை அதகளப்படுத்துகிறார். குறைந்தபட்சம் சாப்பிட்டீர்களா என்று கேட்கக் கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு, சகமனிதனின் வலியை புரிந்துகொள்வது மிக முக்கியம் என்றும், ஒருவர் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்றும் புரிய வைக்கிறது இந்த படம். திரைக்கதையின் கணத்திற்கு ஈடுகொடுத்து பின்னணி இசையால் ரசிகர்களின் மனதை வருடுகிறார் ஷான் ரோல்டன்.
படத்தின் காட்சிகளைப் போலவே, நறுகென்ற வசனங்கள், அரசியல் சூழலை போகிற போக்கில் கேலி செய்துவிட்டுச் செல்கிறது. குறிப்பாக ஒரு குடியிருப்பில் காவலர் சோதனை நடத்தும்போது, அனைவரும் இலங்கை தமிழில் பேசுவர். அப்போது, இலங்கை தமிழில் பேசியது பிரச்சனையா இல்லை தமிழில் பேசியது பிரச்சனையா என்று கேட்கும் வசனம் நேர்த்தியானவை..
சசிகுமாரை காட்டிக்கொடுக்காத ரமேஷ் திலக், நீங்கள் அகதி இல்லை என்று கடைசியில் கூறும் காட்சியில் ஜெயிக்கிறார் இயக்குநர் அபிஷன். சிரிப்பு, அழுகை, பாசம், காதல், மனிதநேயம் என அத்தனை உணர்வுகளையும் சலிப்புத் தட்டாமல் செதுக்கியிருக்கும் இயக்குநர் உண்மையில் பாராட்டுக்குறியவரே.
தமிழ் சினிமாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுக்கப்பட்ட குடும்ப படங்களில் இந்த டூரீஸ்ட் ஃபேமிலி எவர்கிரீன் டிரென்ட் செட்டராக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.