மருத்துவச் செவிலியர்க்குப் புதிய அதிகாரம் - கடுப்பில் மருத்துவர்கள்!!

4 வைகாசி 2025 ஞாயிறு 17:09 | பார்வைகள் : 599
பிரான்சின் பல பகுதிகள் மருத்துவர்கள் அற்ற பகுதிகளாக (DÉSERTS MÉDICAUX) பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நோயாளர்கள் பெரும் அவதியைச் சந்தித்துள்ளனர்.
இதனைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக கடந்த 30ம் திகதி புதிய சட்டமூலம் ஒன்று அரசாங்கத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பட்டம் பெற்ற மருத்துவ செவிலியர்கள் (infirmiers) நோயாளிகளிற்கான சிகிச்சையுடன் அத்தியாவசிய மருந்துகளை எழுதிக் கொடுக்கவும் முடியும்.
இரத்தப் பரிசோதனை, மார்பகப் பரிசோதனை, Xray, RMI, மற்றும் பலவிதமான பரிசோதனைகளிற்கான மருத்துவச் சீட்டுகளையும் இவர்கள் எழுத முடியும்.
இதையும் தாண்டி மருத்துவ வேலை விடுப்புகளையும் (arrêts de travail) இவர்கள் எழுதிக்கொடுக்க முடியும். இது தேசிய மருத்துவக் காப்புறுதியால் (CPAM) ஏற்றுக்கொள்ளப்படும். நிறுவனங்களும் இதனை ஏற்கவேண்டும் என புதிய சட்டமுறை தெரிவிக்கின்றது.
இந்தப் புதிய செவிலியர்களிற்கான அதிகாரங்களை எதிர்த்து. பரிசில் பொது வைத்தியர்கள் போராட்டம் செய்துள்ளனர். ஆனாலும் அரசாங்கம் இந்தப் புதிய சட்டத்தினை உறுதி செய்துள்ளது.