Paristamil Navigation Paristamil advert login

வீட்டில் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல்: சீமான் கண்டனம்

வீட்டில் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல்: சீமான் கண்டனம்

4 வைகாசி 2025 ஞாயிறு 17:54 | பார்வைகள் : 129


வீட்டில் கூட பாதுகாப்பாக வாழ முடியாத கொடுஞ்சூழல் நிலவுவதுதான் திராவிட மாடலா?'' என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள விளக்கேத்தி, வெளாங்காட்டு வலசு பகுதியைச்சேர்ந்த மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயது முதிர்ந்த தம்பதிகளான ராமசாமி - பாக்கியம்மாள் இருவரும் நகைக் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது.

நான்காண்டு கால திமுக ஆட்சியில் வெளியில் மட்டுமல்ல வீட்டிற்குள்ளும் பாதுகாப்பாக வாழ முடியாத கொடுஞ்சூழல் நிலவுவது வன்மையான கண்டனத்திற்குரியது.

பள்ளிகள் முதல் பல்கலைக்கழகம் வரை பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே படுகொலை செய்யப்படுகின்றனர்.மருத்துவர்கள் மீது மருத்துவமனை வளாகத்திலேயே கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. சமூக ஆர்வலர்கள் சாலையில் வைத்து வெட்டி சாய்க்கப்படுகின்றனர். உயிருக்கு ஆபத்து உள்ளது என்று காவல்துறையில் புகாரளித்தாலும் கொல்லப்படும்வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பதுதான் வழக்கமாக உள்ளது.

தனிப்பட்ட கொலை, முன்விரோத கொலை, குடும்பக் கொலை, குடிபோதை கொலை, எங்கோ ஓரிடத்தில் கொலை என்று படுகொலைகளை வகை பிரித்து பாகுபடுத்தி, சட்டம்-ஒழுங்கு சீரழிவை நியாயப்படுத்தும் முதல்வர் ஸ்டாலின் , நீங்கள் கூறிய எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி இதுதானா?

குடும்பங்களாகக் குறிவைத்து கொலைகள் நடைபெறுகிறது. ஒரே பகுதியில் அடுத்தடுத்து பலமுறை கொலைகள் நடைபெறுகிறது. ஆனாலும் கொலைகளைத் தடுக்க முடியவில்லை, கொலையாளிகளைப் பிடிக்க முடியவில்லை என்றால் தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உண்மையில் செயல்படுகிறதா? தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா? இவையும் திராவிட மாடலின் சாதனைகளில் வருகிறதா? என்ற அடுக்கடுக்கான கேள்வி எழுகிறது.

ஆகவே, திமுக அரசு மீதமுள்ள ஓராண்டிற்காவது சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்தி மக்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இனியும் இதுபோன்ற கொடூர படுகொலைகள் தொடரா வண்ணம் தடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்