இந்தியா பாகிஸ்தான் போர் வந்தால்... வங்கதேசம் 'நரி தந்திரம்'

3 வைகாசி 2025 சனி 08:11 | பார்வைகள் : 277
கடந்த 1971ல் வங்கதேசம் உருவாக காரணமாக இருந்ததே இந்தியா தான். ஆனால், இன்று வங்கதேசம், பாகிஸ்தானின் ஊதுகுழலாக மாறிவிட்டது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியை கவிழ்த்ததற்கு, பாக்., ராணுவ தளபதி அசிப் முனீர் தான் காரணம். தற்போது, இந்தியா பாகிஸ்தான் இடையே போர் வந்தால், இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் சீனா உதவியுடன் தாக்குதல் நடத்த வங்கதேசம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவும் பாகிஸ்தானின் மாஸ்டர் பிளான் தான்.
வங்கதேசத்தில், ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பின், தலைமை ஆலோசகர் முஹமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. அவர், 'எடுப்பார் கைப்பிள்ளை' போல் செயல்படுகிறார். பெயருக்கு தான் தலைமை ஆலோசகர். ஆனால், அவருக்கு தான் ஆலோசனை தேவைப்படுகிறது.
இவரது நெருங்கிய, 'நட்பு வட்டமான' ஓய்வுபெற்ற வங்கதேச ராணுவ அதிகாரி பஸ்லுார் ரஹ்மான் என்பவர் புது குண்டை துாக்கி போட்டுள்ளார். 'பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுக்கும் பட்சத்தில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை ஆக்கிரமிக்க வேண்டும். வங்கதேசம், பாகிஸ்தான் இணைந்த ஒரு ராணுவ கூட்டணிக்காக சீனாவுடன் பேச்சு நடத்த வேண்டும்' என, சர்ச்சைக் கருத்துக்களை அள்ளி வீசியுள்ளார்.
பாகிஸ்தானுடன் சேர்ந்து வங்கதேசம் அடிவாங்குமா என்பது, போகப்போக தான் தெரியும்!