முதல் சர்வதேச போட்டியிலேயே முத்திரை பதித்த இலங்கையின் தேவ்மி விஹங்க

2 வைகாசி 2025 வெள்ளி 12:25 | பார்வைகள் : 396
மகளிர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கையின் தேவ்மி விஹங்க பந்துவீச்சில் மிரட்டியுள்ளார்.
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் வோல்வார்ட் 10 ஓட்டங்களிலும், பிரிட்ஸ் 14 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த லாரா குட்டால் அபாரமாக ஆடினார்.
மறுமுனையில், நிதானமாக ஆடிய கரபோ மெஸோ 27 பந்துகளில் 9 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இனோக ரணவீரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த சுனே லூஸ், லாரா கூட்டணி அமைத்தனர். லாரா 46 ஓட்டங்கள் எடுத்த நிலையில் தேவ்மி விஹங்க பந்துவீச்சில் அவுட் ஆனார்.
அதன் பின்னர் சுனே லூஸும் 31 (39) ஓட்டங்களில் தேவ்மி விஹங்க ஓவரில் கிளீன் போல்டானார்.
தனது முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கியிருக்கும் தேவ்மி விஹங்க (Dewmi Vihanga), தென் ஆப்பிரிக்காவின் இரு முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி முத்திரை பதித்துள்ளார்.