Paristamil Navigation Paristamil advert login

விதிமீறிய கட்டங்களுக்கு விலக்கு கேட்க உரிமை கிடையாது

விதிமீறிய கட்டங்களுக்கு விலக்கு கேட்க உரிமை கிடையாது

2 வைகாசி 2025 வெள்ளி 06:44 | பார்வைகள் : 153


விதிகளை மீறி கட்டடம் கட்டிவிட்டு, பிரச்னை எழுந்த பின் நீதிமன்றத்துக்கு வந்து விலக்கு தாருங்கள்; சலுகை காட்டுங்கள் என்று கேட்க எவருக்கும் உரிமை கிடையாது. விதிகளை மதிக்காமல் கட்டப்பட்ட அனைத்து கட்டடங்களையும் இடித்து தள்ளுவதே சரியான தீர்வு' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மனிதாபிமானத்தின் பெயரால் அல்லது வேறு காரணங்களால், விதி மீறிய 'பில்டர்'களை பாதுகாக்க, மாநில அரசுகள் சட்டம் இயற்றுவதை நீதிபதிகள் கண்டித்தனர்.

மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில், முறையான அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்கு மாடி கட்டடத்தை இடிக்க கொல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து கட்டட உரிமையாளர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மஹாதேவன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதுவே தீர்வு


அப்போது, 'விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை முறைப்படுத்த மாநில அரசுகள் அவ்வப்போது சட்டம் இயற்றுகின்றன. விதி மீறியதற்காக அபராதம் அல்லது தண்டத்தொகை செலுத்தினால், கட்டடத்தை முறைப்படுத்தியதாக அறிவித்து சான்றிதழ் தருகின்றன. எங்களுக்கும் அந்த வாய்ப்பை வழங்க வேண்டும்' என, மனுதாரர் தரப்பில் வாதிட்டனர்.

அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தெரிந்தே சட்டத்தை மீறுபவர்களை வெறும் அபராதத்துடன் தப்ப விடக்கூடாது. விதிகளை மீறி அவர்கள் கட்டிய கட்டடங்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதை இடித்து தள்ள வேண்டும். விதி மீறலுக்கு இதுவே தீர்வு. அதில், யாருக்கும் விலக்கு அளிக்கக் கூடாது.


முறைப்படுத்தல் அல்லது வரையறை செய்தல் என்ற பெயரில் அரசாங்கமே விதிமீறலை அங்கீகரிப்பது, அனைவருக்கும் பொதுவான சட்டங்களில் இருந்து, வசதி படைத்தவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கும் கலாசாரத்தை வளர்க்கும்.

உத்தரவு


விதிகளை மதிக்காமல் அதை புறக்கணிப்பவர்களை சட்டம் பாதுகாக்கும் எனில், ஒழுங்கான, நியாயமான சமூகத்தில் சட்டத்தின் பாய்ச்சலை குறைத்து மதிப்பிட வழிவகுக்கும். சட்டத்தை மதிக்காமல் அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்தை எழுப்பிய பின், அதை முறைப்படுத்தும்படி கோர எவருக்கும் உரிமை கிடையாது. எனவே, சட்டவிரோத கட்டுமானம் இடிக்கப்பட வேண்டும்; இதில் விலக்கு அளிக்க முடியாது. சட்டத்தின்படி நீதி வழங்கப்பட வேண்டும்.

மாநில அரசுகள், இதுபோன்ற விதி மீறல் கட்டடங்களுக்கு அபராதமோ அல்லது கட்டணமோ விதித்து அதை முறைப்படுத்தும் போக்கு கவலை அளிக்கிறது. அவர்களின் நடவடிக்கைகள், நகர்ப்புற திட்டமிடலில் விதிமீறல்களை ஊக்குவிப்பதோடு, சட்டம் -- ஒழுங்கை செல்லரிக்கச் செய்கிறது.

சட்ட விரோத கட்டுமான வழக்குகளை கையாளும் போது, அனுதாபத்தை தவிர்த்து கடுமையான அணுகுமுறையை நீதிமன்றங்கள் கடைப்பிடிக்க வேண்டும். இந்த வழக்கில் கொல்கட்டா உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை உறுதி செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்