தனுஷின் 'ரூல் பிரேக்கர்' நாளை வெளியாகிறதா?

1 வைகாசி 2025 வியாழன் 19:00 | பார்வைகள் : 149
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது அனேகமாக தனுஷின் படமாக தான் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அந்த எதிர்பார்ப்பு சரியாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் திரையுலகில் 'தேவி' என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ். அதன் பின்னர் அவர் 'போகன்', 'எல்கேஜி', 'கோமாளி', 'மூக்குத்தி அம்மன்', 'வெந்து தணிந்தது காடு' உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.
தற்போது ஜெயம் ரவி நடித்து வரும் 'ஜெனி' மற்றும் நயன்தாரா நடித்து வரும் 'மூக்குத்தி அம்மன் 2' ஆகிய படங்களை தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு சினிமா விழாவில், தனுஷ் நடிக்க இருக்கும் இரண்டு படங்களை தான் தயாரிக்க இருப்பதாக அறிவித்தார். அதில் ஒன்று தனுஷ் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிறது என்றும், அதற்கு முன்பே தனுஷின் இன்னொரு படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில், "நாளை புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகிறது என்றும், ஒரு புதிய ரூல் பிரேக்கர் வருகிறார்" என்றும் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, அடுத்த படம் அனேகமாக அவர் கூறிய தனுஷ் படமாக தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் கணிப்பு சரியாக இருக்குமா என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.