நீங்கள் புத்திசாலியா? அப்ப உங்க காதலில் நிச்சயம் இந்த பிரச்சினைகள் வருமா....?

1 வைகாசி 2025 வியாழன் 14:37 | பார்வைகள் : 131
காதல் என்பது ஒரு ஆழமான மற்றும் சிக்கலான உணர்ச்சி, காதலில் எப்போதும் லாஜிக் பார்க்கக்கூடாது மேஜிக் மட்டும்தான் பார்க்க வேண்டும் என்று கூறுவார்கள், அதனால்தான் என்னவோ புத்திசாலிகள் எப்போதும் காதலில் போராடுகிறார்கள். "காதல் என்பது முட்டாளின் ஞானம் மற்றும் ஞானிகளின் முட்டாள்தனம்." என்று ஆங்கிலப் பொன்மொழி உள்ளது.
புத்திசாலித்தனம் பொதுவாக ஒரு சிறப்பான குணமாகக் கருதப்பட்டாலும், அது சில நேரங்களில் காதல் விஷயங்களில் எதிர்பாராத சவால்களை ஏற்படுத்தக்கூடும். விமர்சன சிந்தனை, பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காண்பவர்கள் மற்றும் தொழில்முறை வெற்றி ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்கள் அதே பகுப்பாய்வு மனநிலையுடன் காதலையும் அணுகலாம், இது அவர்களின் உறவுகளில் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தலாம்.
அவர்களின் உயர் தரநிலைகள் மற்றும் ஆழ்ந்த சுயபரிசோதனை ஒரு இணக்கமான துணையைக் கண்டுபிடிப்பதை சவாலாக மாற்றும். வாழ்க்கையின் பல அம்சங்களில் புத்திசாலித்தனம் தெளிவைக் கொண்டுவரும் அதே வேளையில், காதல் கண்மூடித்தனமான அன்பு, முன்னேற்பாடுகள் இல்லாத ஆச்சரியங்கள் போன்றவற்றை எதிர்பார்க்கலாம், இந்த குணங்கள் எப்போதும் அதிக அறிவுள்ள நபர்களுக்கு இயல்பாக வராது. இந்த பதிவில் புத்திசாலிகள் காதல் உறவில் எதிர்கொள்ளும் போராட்டங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
அதிகமாக யோசிப்பது தன்னிச்சையான செயல்பாடுகளை சிதைக்கும்
அதிக புத்திசாலி நபர்கள் சூழ்நிலைகளை ஆழமாக பகுப்பாய்வு செய்கிறார்கள், பெரும்பாலும் உணர்ச்சிகள், செயல்பாடுகள், எதிர்வினைகள் மற்றும் உரையாடல்களை பற்றி சிந்தித்து அதன் பின்னரே செயல்படுகிறார்கள். இந்த அதிகப்படியான சுயபரிசோதனை மற்றும் அதிகமாக யோசிப்பது அவர்கள் காதலில் எதிர்பாராத இன்பங்கள் அனுபவிப்பதைத் தடுக்கலாம், இது உறவுகளில் முடிவெடுக்க முடியாத தன்மை மற்றும் சுய சந்தேகத்திற்கு வழிவகுக்கும்.
அனைத்திலும் பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்று நினைப்பது
புத்திசாலிகள் பெரும்பாலும் தங்களுக்கும் தங்கள் கூட்டாளிகளுக்கும் உயர்ந்த தரநிலைகளை நிர்ணயித்துக் கொள்கிறார்கள். அவர்கள் ஒரு உறவில் ஆழ்ந்த அறிவுசார் உரையாடல், மெச்சூரிட்டி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை நாடுகிறார்கள். இந்த குணங்கள் முக்கியமானவை என்றாலும், அனைத்திலும் பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்பது நம்பத்தகாத எதிர்பார்ப்புகளுக்கு வழிவகுக்கும், இதனால் ஒரு காதலில் ஈடுபடுவது அல்லது தொடர்ந்து நிலைத்திருப்பது கடினமாக இருக்கும்.
உணர்வுரீதியான இணக்கமின்மை
அனைத்து விஷயத்தையும் லாஜிக்காக அணுகுவார்கள் பெரும்பாலும் உணர்வுரீதியான பிணைப்புக்காக போராடுகிறார்கள். அவர்கள் உணர்வுகளை விட பகுத்தறிவுக்கு முன்னுரிமை அளிக்கலாம், இதனால் அவர்களின் காதலன்/காதலி அவர்களுடன் உணர்வுரீதியான இணைவது கடினம். இந்த பற்றற்ற தன்மை தவறான புரிதல்களையும் நெருக்கமின்மையையும் ஏற்படுத்தும்.
கமிட்மென்ட் மீதான பயம்
புத்திசாலித்தனமான நபர்கள் காதலில் முழுமையாக ஈடுபடுவதற்கு முன்பு அதன் நீண்டகால தாக்கங்களை பற்றி சிந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்கள் உணர்ச்சி சார்ந்திருத்தல், தனித்துவத்தின் இழப்பு அல்லது தோல்விக்கான வாய்ப்பு எல்லாவற்றையும் அதிகமாகக் கணக்கிட்டு, தீவிர உறவில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பு தயங்குகிறார்கள்.
பொருத்தமான துணை கிடைப்பது கடினம்
அறிவுசார் இணக்கத்தன்மை கிடைப்பது மிகவும் அரிதானது. புத்திசாலி நபர்கள் பெரும்பாலும் ஆழமான உரையாடல்கள், தத்துவ விவாதங்கள் மற்றும் அர்த்தமுள்ள பரிமாற்றங்களை விரும்புகிறார்கள். அவர்களின் அறிவுத்திறன் மற்றும் ஆர்வத்தின் நிலைக்கு ஏற்ற ஒரு துணையைக் கண்டுபிடிப்பது சற்று சவாலானதாக இருக்கலாம், இதனால் காதல் துணையைக் கண்டறிவதும், பராமரிப்பதும் கடினமாகிவிடும்.