விஜய் கட்சியை இழுக்க அ.தி.மு.க., - பா.ஜ., தீவிர முயற்சி

30 சித்திரை 2025 புதன் 10:25 | பார்வைகள் : 571
கூட்டணிக்கு விஜய் கட்சியை இழுக்க, அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளன. அமித் ஷா யோசனைப்படி, விஜய்க்கு நெருக்கமான ஆடிட்டரிடம், பழனிசாமி ஆதரவு தொழிலதிபர் பேச்சு நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.
வரும், 2026 சட்டசபை தேர்தலுக்கு, 'பூத்' கமிட்டி நிர்வாகிகளை நியமிக்கும் பணியை, த.வெ.க., முடித்துள்ளது. முதற்கட்டமாக, கொங்கு மண்டலத்தில் உள்ள பூத் கமிட்டி நிர்வாகிகளை, கட்சி தலைவர் விஜய் சந்தித்துள்ளார். அடுத்தகட்டமாக, தென்மண்டல பூத் நிர்வாகிகளை, மதுரையில் சந்திக்க உள்ளார்.
நிறைவேறும்
கோவை நிகழ்ச்சிக்கு சென்ற விஜய்க்காக கூடிய கூட்டம், பெரிய கட்சிகளுக்கு கலக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. இதற்கு முன் அவர் பரந்துார் உட்பட சில ஊர்களுக்கு சென்றபோதும் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டது.
இதை மத்திய - மாநில உளவுத்துறை அதிகாரிகள் கவனித்து, தலைமைக்கு குறிப்பு அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால், விஜய் கட்சியை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற எண்ணம், அ.தி.மு.க., - பா.ஜ., தலைவர்களிடம் வலுப்பெற்றுள்ளது.
தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே புள்ளியில், மூன்று கட்சிகளும் இணைந்தால், குறிக்கோள் நிச்சயமாக நிறைவேறும் என, நம்புகின்றனர்.
டில்லி சென்ற, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனிடம் அமித் ஷா இதுகுறித்து விரிவாக பேசியுள்ளார். அவரது யோசனைப்படி, விஜய்க்கு மீண்டும் துாது அனுப்பப்பட்டுள்ளது. த.வெ.க., துவங்கப்பட்ட போதே, அ.தி.மு.க., தரப்பில் துாதுவர் பேசினார்.
முதல்வர் பதவியை தனக்கு விட்டுக்கொடுக்க சம்மதித்தால் மட்டுமே பேச்சு என்று, விஜய் சொல்லி விட்டதால், அந்தப் பேச்சு அப்படியே நின்று போனது.
அதன்பிறகு தான், அ.தி.மு.க.,வுக்கு அழுத்தம் கொடுத்து, தே.ஜ., கூட்டணிக்குள் மீண்டும் கொண்டு வந்தது பா.ஜ., தலைமை. எனினும், தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகளில் பெரும்பகுதியை விஜய் இழுக்க முடியும் என, உளவுத்துறையின் கணிப்புகள் ஊர்ஜிதம் செய்ததால், அந்த வழியை அடைக்க அமித் ஷா விரும்புகிறார்.
நம்புகிறது
அவர் ஆலோசனைப்படி, விஜய்க்கு நெருக்கமான ஒரு பிரமுகரை, அ.தி.மு.க., தொடர்பு கொண்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வசிக்கும் அந்த ஆடிட்டர், விஜய்க்கும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கும் நெருக்கமானவர். கொங்கு மண்டலத்தில் பல தொழிலதிபர்களுடன் அவருக்கு நெருக்கம் உண்டு.
என்னதான் விஜய்க்கு மக்கள் கூட்டம் திரண்டாலும், அ.தி.மு.க., களத்தில் இருக்கும் வரை, தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகளை முழுதுமாக அவரால் பெற முடியாது; எனவே, அந்த ஓட்டுகள் பிரிந்து, தி.மு.க.,வுக்கே ஆதாயமாக முடியும் என்ற எதார்த்தத்தை ஆடிட்டரால் எடுத்துச் சொல்ல முடியும் என, பா.ஜ., தலைமை நம்புகிறது.
தேர்தலுக்குப் பின் அமையும் கூட்டணி ஆட்சியில், த.வெ.க.,வும் பங்கெடுக்க வாய்ப்பு கிட்டும்; அக்கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அது பேருதவியாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
ஆட்சியில் பங்கு என்ற வாக்குறுதி திருமாவளவனை தன் பக்கம் கொண்டு வரும் என்று விஜய் எதிர்பார்த்தார். திருமா அந்த ஆபரை ஏற்க மறுத்தது அவருக்கு ஏமாற்றம்.
இந்த நிலையில் தனித்துப் போட்டியிட்டு தோற்று, 'த.வெ.க.,வின் நிலைப்பாடு தான் தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரக் காரணம்' என, வரலாறு எழுதப்படுவதை விஜய் நிச்சயமாக ஜீரணிக்க மாட்டார். எனவே, இந்த வாதங்களை ஏற்றுக்கொள்வார் என்ற எதிர்பார்ப்புடன் இரு கட்சிகளும் காத்திருக்கின்றன.