Paristamil Navigation Paristamil advert login

விஜய் சேதுபதிக்கு கேம் சேஞ்சராக மாறியதா ஏஸ்?

விஜய் சேதுபதிக்கு கேம் சேஞ்சராக மாறியதா ஏஸ்?

23 வைகாசி 2025 வெள்ளி 14:14 | பார்வைகள் : 166


தமிழ்நாட்டை சேர்ந்த விஜய் சேதுபதி தனது அடையாளத்தை மாற்றிக் கொண்டு மலேசியா செல்கிறார். அங்கு யோகிபாபு உறவினர் எனச் சொல்லி அவரது வீட்டில் தங்குகிறார். அவரது வீட்டிற்கு எதிரே குடியிருக்கும் ருக்மணி வசந்தை பார்த்ததும் விஜய் சேதுபதி காதலிக்க தொடங்குகிறார். அப்போது தான் ருக்மணி வசந்த், அவரது வளர்ப்பு தந்தையும், போலீஸ் அதிகாரியுமான பப்லுவிடம் டார்ச்சர் அனுபவித்து வருவது தெரிய வருகிறது.

இந்நிலையில் மலேசியாவில் சட்டத்துக்கு புறம்பான வேலைகளை செய்து வரும் பெரிய தாதாவான கே.ஜி.எப் அவினாஷ் கிளப்பில் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார் விஜய் சேதுபதி. அப்போது தர்மாவுடன் விளையாடி ஒரு கோடி ரூபாய் அளவுக்கு ஏமாற்றி தோற்கடிக்கப்படுகிறார். இதனால் அவரை கடனாளி ஆக்கி, அவரது பாஸ்போர்ட்டையும் பிடுங்கி கொள்கிறார் அவினாஷ். இந்த சூழ்நிலையில் அவினாஷ் கடனிலிருந்து மீள்வதற்கும், பப்லுவிடம் இருந்து ருக்மணி வசந்தை காப்பாற்றவும் விஜய் சேதுபதி ஒரு சம்பவத்தை செய்கிறார். அந்த செயலால் அவர் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதிலிருந்து எப்படி மீண்டார்? ருக்மணி வசந்தை பப்லுவிடமிருந்து காப்பாற்றினாரா? அவினாஷ் பிரச்னையை எப்படி எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதி கதை.

தமிழ் சினிமாவில் ஏற்கனவே பார்த்து சலித்து போன ஒரு கதை களத்தை கையில் எடுத்துள்ளார் இயக்குனர் ஆறுமுக குமார். கதைக்களம் மலேசியா என்பதை தவிர வேறு எதுவும் படத்தில் புதிதாக தெரியவில்லை. அதேபோல் விஜய் சேதுபதி எதற்காக தனது அடையாளங்களை மறைத்துக் கொண்டு மலேசியா சென்றார் என்பதற்கு எந்த ஒரு தெளிவும், விளக்கமும் கதையிலும், காட்சியிலும் இல்லாமல் இருப்பது அந்த கேரக்டருக்கு பிடிமானம் இல்லாமல் இருக்கிறது. முதல் பாதியை சற்று விறுவிறுப்பாக கடத்தி சென்ற இயக்குனர் இரண்டாம் பாதியில் தடுமாறி இருப்பது திரைக்கதையில் தெரிகிறது.

குறிப்பிட்ட நடிகர்களை வைத்துக் கொண்டு முழு படத்தையும் மலேசியாவில் படமாக்கி இருப்பது பாராட்டுக்குரியது. அதேபோல் ருக்மணி வசந்த் பேசும் வசனங்கள் பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக இருப்பது இயக்குனர் கவனத்திற்கு வரவில்லையா? மலேசியா போன்ற முன்னேறிய நாடுகளில் வங்கிக் கொள்ள என்பதெல்லாம் அவ்வளவு ஈசியாக நடத்த முடியும் என்பது லாஜிக் மீறலாக தெரிகிறது.

விஜய் சேதுபதி தனது வழக்கமான நடிப்பின் மூலம் அந்த படத்தை தாங்கி பிடிக்கிறார். ருக்மணி வசந்துடன் காதல், வில்லன் அவினாசுடன் மோதல் என தனக்கே உரிய பாணியில் நடித்து பாராட்டு பெறுகிறார். இருப்பினும் அவருக்கான முக்கியத்துவம் இல்லாத இது போன்ற கதைகளில் நடிப்பதை இனி வரும் காலங்களில் தவிர்க்கலாம்.

அவருக்கு அடுத்ததாக படத்தை கலகலப்பாக கொண்டு செல்வது யோகிபாபு. படம் முழுக்க விஜய் சேதுபதியுடன் இணைந்து அவர் செய்யும் 'டைமிங்' காமெடிகள் ரசிக்க வைக்கிறது. பல நடிகர்கள் பெண் வேடம் தரித்து பயமுறுத்திய நிலையில் யோகி பாபுவும் இதில் லேடி கெட்டப்பில் பயமுறுத்தி உள்ளார்.

இந்த படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள ருக்மணி வசந்த் திரையில் அழகாக தெரிகிறார். விஜய் சேதுபதியுடன் காதல் காட்சிகளிலும், வளர்ப்பு தந்தை பப்லுவிடம் சிக்கி கொண்டு பரிதவிக்கும் காட்சிகளிலும் ருக்மணி ஸ்கோர் செய்துள்ளார். வில்லனாக மிரட்டல் நடிப்பு கொடுத்துள்ளார் அவினாஷ். பப்லு பிரிதிவிராஜ் கேரக்டரை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருந்தால் ரசிக்கும்படியாக இருந்திருக்கும். இவர்களோடு மற்ற நடிகர்களும் தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

பாடல்களுக்கு இசையமைத்துள்ள ஜஸ்டின் பிரபாகர் ஒர் அளவிற்கு ஸ்கோர் செய்துள்ளார். அதேநேரம் பின்னணி இசை அமைத்துள்ள சாம் சி எஸ். பல இடங்களில் காதுகளை பதம் பார்க்கிறார். சண்டை காட்சிக்கு சம்பந்தமில்லாத பின்னணி இசையை கொடுத்து சோதிக்கிறார். கரன் பி.ராவத் தனது கேமரா மூலம் மலேசியாவை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.

மலேசியாவும், விஜய் சேதுபதியின் நடிப்பும் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்துள்ளது. ஒரு சில காட்சிகளை ரசிக்கும் படியாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதோடு யோகி பாபுவின் கவுன்டர் டயலாக் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறது. இதைத் தவிர திரைக்கதையில் எந்தவித புதுமையும் இல்லை. காட்சிகளில் சுவாரசியம் குறைவாக இருப்பதால் படத்தை ரசிக்க முடியவில்லை. இரண்டாம் பாதி நீண்ட தூரம் செல்வது போல தெரிகிறது. வங்கிக் கொள்ளையில் புதுவித ஐடியா இல்லாதது லாஜிக் மீறலாக தெரிகிறது. அதோடு படத்தின் நீளமும் பெரிய மைனஸ்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்