பச்சை மலைகளில் சிவப்புக் கொடிகள் பறப்பதை மலையகக் கட்சிகள் விரும்புமா ?

19 வைகாசி 2025 திங்கள் 14:22 | பார்வைகள் : 274
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 133,391 வாக்குகளோடு 131 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி பெற்று முதலிடத்திலிருந்தாலும் எதிரணிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெற்றுக்கொண்ட ஆசனங்கள் 190 ஆகும். 12 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தியானது தனித்து ஆட்சியமைக்க சவால்களை எதிர்கொண்டுள்ளது என்பது உண்மை.
இந்நிலையில் மலையகத்தின் பிரதான கட்சிகளான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைமைகள் தம்மிடையே பேச்சுக்களை ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எச்சந்தர்ப்பத்திலும் இக்கட்சிகள் மலையகப் பிரதேசங்களில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க தமது ஆதரவை தரப்போவதில்லையென ஆரம்ப கட்டமாக முடிவெடுத்திருப்பதாக தெரிகின்றது.
மறுபக்கம் மக்களால் நிராகரிக்கப்பட்ட எந்த கட்சிகளோடும் தாம் இணைந்து ஆட்சியமைக்கப் போவதில்லையென தேசிய மக்கள் சக்தி முன்னதாக அறிவித்திருந்தது. சுயேச்சை கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படும் என்று கூறியுள்ளது. ஏற்கனவே சில சுயேச்சைக்குழுக்களுடன் பிரதேச மட்டங்களில் பேச்சுக்ககள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் பெரும்பான்மையோடு ஆட்சியமைக்க அக்குழுக்களின் ஆதரவு போதாது.
இதே வேளை சில சபைகளை கைப்பற்றுவதற்கு மலையகக் கட்சிகளுடன் தமது தூதுவர்களை அனுப்பி தேசிய மக்கள் சக்தி பேச்சு நடத்தியிப்பதை மறுக்கவும் முடியாது. கட்சித் தலைமைகளுடன் மாத்திரமல்லாது வெற்றி பெற்ற கட்சி உறுப்பினர்களின் வீடுகளுக்கே தமது ஆதரவாளர்களை அனுப்பியும் ஆதரவு கேட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சிலரின் வீடுகளுக்கு வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களும் சென்றுள்ளனர். இச்சம்பவங்கள் நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தின் சில சபைகளை கைப்பற்றி ஆட்சியமைக்க தேசிய மக்கள் சக்தியானது மலையகக் கட்சிகளை அணுகியிருக்கின்றமை முக்கிய விடயம். ஏனைய அனைத்து சபைகளையும் மலையகக் கட்சிகள் எடுத்துக் கொண்டாலும் தமிழ் மக்கள் அதிகமாக உள்ள சில உள்ளூராட்சி சபைகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க இம்மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களும் கடும் பிரயத்தனம் எடுத்து வருகின்றனர்.
குறிப்பாக அட்டன் – டிக்கோயா நகரசபையை கைப்பற்ற இங்கு இரண்டு ஆசனங்களை பட்டியல் மூலம் பெற்றுள்ள இ.தொ.காவினரை, தேசிய மக்கள் சக்தி அணுகியுள்ளது. இ.தொ.கா வானது சேவல் சின்னத்தில் தனித்து போட்டியிட்டதால் அதை ஒரு சுயேச்சைக் குழுவாக தேசிய மக்கள் சக்தியினர் கருதினார்களோ தெரியவில்லை. ஆனால் இ.தொ.காவின் அரசியல் பிரிவே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டது.
நுவரெலியா மாவட்டத்தின் பன்னிரெண்டு சபைகளிலும் ஆசனங்களை கைப்பற்றியுள்ள தேசிய
மக்கள் சக்திக்கு சில நகர வர்த்தகர்களும் பெருந்தோட்டப்பகுதி இளைஞர்களும், கல்வி சமூகமும் ஆதரவை நல்கியுள்ளமை பெறுபேறுகளின் மூலம் உணர்ந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.
மலையக நகரங்களிலும் தோட்டப்பகுதிகளிலும் காலூன்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தேசிய மக்கள் சக்தி பயன்படுத்தியுள்ளமை வெட்டவெளிச்சமாகியுள்ளது.
ஆகவே சில சபைகளை கைப்பற்றுவதன் மூலம் தொழிற்சங்க ரீதியாக இணைந்துள்ள தொழிலாளர் கட்டமைப்பை அரசியல் கட்சியாக அணி திரட்ட தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கலாம்.
தோட்டத் தொழிலாளர்கள் அதிகமாக வாழ்ந்து வரும் நுவரெலியா–மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள சில தோட்டப்பகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் சிலர் தமது தோட்டப்பகுதிக்குள் கட்சி கொடியினை ஏற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளமை இதற்கு ஒரு சான்று. இ.தொ.காவின் கோட்டையாகக் கருதப்பட்ட நுவரெலியா மாவட்டத்தின் அனைத்துத் தோட்டப்பகுதிகளிலும் ஆரம்ப காலங்களில் இ.தொ.காவின் கொடிகளே பறந்தன.
மலையக மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்ற பிறகு அக்கட்சியின் கொடிகள் அசைந்தன. 2015 ஆம் ஆண்டுக்குப்பின்னர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொடிகள் பறக்க ஆரம்பித்தன. தற்போது தேசிய மக்கள் சக்தியின் கொடிகள் ஏற்றப்பட்டு வருகின்றன.
ஆரம்பத்தில் மகிந்தவோடு மிகவும் நெருக்கமாக இருந்த அமரர் ஆறுமுகன் தொண்டமான் பெருந்தோட்டப்பகுதிக்குள் அவரது சகாக்கள் நுழைவதற்கு இடமளிக்கவில்லை. மகிந்த தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிகாரிகள் ஊடாக பெருந்தோட்டப்பகுதிகளின் தரிசு நிலங்களை அளவீடு செய்யும் முயற்சியை முன்னெடுத்தார்.
அதற்கு மேல் மகிந்தவால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. எனினும் 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் பொதுஜன பெரமுனவின் ஆதரவோடு தான் ஆறுமுகன் மாவட்டத்தின் ஐந்து சபைகளை தன்வசப்படுத்தியிருந்தார். மகிந்தவோடு நெருக்கமாக செயற்பட்ட முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் தொழிற்சங்கம் நாவலப்பிட்டி மற்றும் அதை அண்டிய பகுதிகளிலுள்ள தோட்டங்களில் அங்கத்தவர்களைப் பெற்றிருந்தது.
நுவரெலியா மாவட்டத்தின் சில தோட்டப்பிரிவுகளில் மகிந்தானந்தவின் தொழிற்சங்கத்தில் சில அங்கத்தவர்கள் இணைந்தாலும் அடுத்தடுத்த காலகட்டங்களில் அவர்கள் தமது உறுப்புரிமையை புதுப்பிக்கவில்லை.
மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்க செயற்பாடுகளின் தீவிரங்கள் பற்றி புதிதாக ஒன்றும் கூறத் தேவையில்லை. அவர்கள் தொழிலாளர் வர்க்கத்தினரை எவ்வாறு அணுகுவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆகவே மாவட்டத்தின் சில சபைகளின் ஆட்சியதிகாரத்தில் அமர்வதற்கு தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக இ.தொ.காவோ, ஏனைய இரண்டு கட்சிகளின் வெற்றி பெற்ற உறுப்பினர்களோ அல்லது சுயேச்சைக் குழுக்களோ கைகளை உயர்த்துவதற்கு முன்னர் இந்த விடயம் குறித்து சற்று சிந்திக்க வேண்டியுள்ளது.
தேர்தல் பிரசார காலத்திலும் அதற்கு முன்பதாக பாராளுமன்ற விவாதங்களிலும் தேசிய மக்கள் சக்தியின் கடந்த கால வரலாற்றைப் பற்றி பேசிய இ.தொ.கா மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ,மலையக மக்கள் முன்னணியின் தலைமைத்துவங்கள் தற்போது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக செயற்படுவதில் எந்த நியாயமும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
மார்ச் மாதம் பாராளுமன்றில் இடம்பெற்ற பெருந்தோட்ட அமைச்சு மீதான வரவு செலவு திட்ட விவாதத்தில் உரையாற்றியிருந்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி, இத்தனை வருடங்களாக மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் அம்மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என கூறியிருந்தார்.
தனது சந்தர்ப்பத்தில் இதற்கு கொதிப்பாக பதிலளித்த இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் ‘ மலையகப்பிரதிநிதிகள் ஏன் மன்னிப்பு கோர வேண்டும்? கடந்த காலங்களில் ஜே.வி.பியினர் பெருந்தோட்டப்பகுதிகளில் சுமார் 54 தேயிலை தொழிற்சாலைகளை எரியூட்டியிருந்தனர்.
அதற்கு உங்கள் கட்சி மன்னிப்பு கோருமா என பதில் கேள்வி கேட்டிருந்தார். இது நியாயமான கேள்வி. அவ்வாறு கேள்வி எழுப்பிய இ.தொ.கா, தொழிற்சாலைகளை தீ வைத்து கொளுத்திய ஒரு கட்சிக்கு ஆதரவளித்து அவர்களை தொழிற்சாலைகள் அமைந்துள்ள தோட்டப்பகுதிக்குள் ஊடுருவ அனுமதிக்காது என நம்பலாம்.
அதே போன்று தேர்தல் காலங்களில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் நிலவுரிமை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியினர் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையென இ.தொ.கா உட்பட தொழிலாளர் தேசிய சங்கமும் மலையக மக்கள் முன்னணியும் தமது ஆதரவாளர்கள் மத்தியில் பிரசாரங்களை முன்னெடுத்திருந்தனர்.
எனவே தேசிய மக்கள் சக்தியினர் சபைகளை அமைப்பதற்கு ஆதரவு தர முன் வரும் எந்த மலையக தரப்பினரும் அடுத்த நான்கு வருடங்களுக்கு தொழிலாளர்களின் மேற்படி பிரச்சினைகள் பற்றி வாய் திறக்க முடியாது. மட்டுமின்றி அது குறித்த தொழிலாளர்களின் கேள்விகளுக்கும் பதில் கூற வேண்டியதாக இருக்கும்.
எது எவ்வாறெனினும் நுவரெலியா மாவட்டத்தில் தமது செல்வாக்கை தேசிய மக்கள் சக்தி போன்ற ஒரு அமைப்புக்கு தாரை வார்த்துக் கொடுப்பதற்கு மலையகக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் என்றுமே முன்வரப்போவதில்லை. மத்திய அரசாங்கத்தில் ஆட்சியமைக்கும் ஒரு கட்சியோடு இணைந்து செயற்படுவது வேறு உள்ளூராட்சி நிறுவனங்களில் தேசிய கட்சியொன்றுக்கு ஆதரவாக செயற்படுவது வேறு என்பதை மலையகக் கட்சிகள் உணர்ந்தால் சரி.
பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தியி காட்டிய அதிரடி அரசியல் பிரவேசம், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எடுபடவில்லை. அம்முயற்சி கை கூடாவிடினும் மலையக நகரங்கள் மற்றும் தோட்டப்பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக் கூடிய பிரதேச சபைகளை கைப்பற்றும் முயற்சிகள் அநுர அரசாங்கத்துக்கு எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
நன்றி virakesari