சந்தானம் காமெடியில் கலக்கினாரா?

16 வைகாசி 2025 வெள்ளி 17:57 | பார்வைகள் : 163
சினிமா யு-டியூப் விமர்சனகளால் பாதிக்கப்பட்ட இயக்குனர் செல்வராகவன் தற்கொலை செய்து தியேட்டரிலேயே ஆவியாக இருக்கிறார். இதனால் சினிமாவைப் பற்றி தவறாக விமர்சனம் செய்பவர்களை தியேட்டருக்கு வரவழைத்து கொலை செய்கிறார். இந்நிலையில் சினிமா யு டியூப் விமர்சகரான சந்தானத்துக்கும் தியேட்டருக்கு குடும்பத்துடன் படம் பார்க்க வரும்படி அழைப்பு வருகிறது. தனது அப்பா நிழல்கள் ரவி, அம்மா கஸ்தூரி, தங்கை யாஷிகா ஆனந்த் ஆகியோருடன் தியேட்டருக்கு செல்கிறார் சந்தானம். அங்கு சென்ற பிறகு திரையில் ஓடுகின்ற படத்திற்குள் இவர்கள் அனைவரும் ட்ராவல் ஆகின்றனர். அவர்களை செல்வராகவன் ஆட்டி வைக்க தொடங்குகிறார். இறுதியில் அதிலிருந்து எப்படி மீண்டனர்? சந்தானம் அதை எப்படி சமாளித்தார்? அதன்பிறகு என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை.
சிரித்து சிரித்து வயிறு வலிக்கும் அளவுக்கு ரசித்த டிடி ரிட்டன்ஸ் படத்தைத் கொடுத்த பிரேம் ஆனந்த் இந்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தையும் கொடுத்திருக்கிறார். இருப்பினும் இதில் அவர் எதிர்பார்த்த காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை. சந்தானத்தின் வழக்கமான ஸ்டைலுக்கு மாறான டயலாக் டெலிவரி மற்றும் பாடி லாங்குவேஜ் கனெக்ட் ஆகவில்லை. மாறனைத் தவிர மற்ற நடிகர்கள் வரும் காட்சிகளில் சிரிப்புக்கு பதிலாக சலிப்பே ஏற்படுகிறது. இருப்பினும் ஹாரர் படத்திற்குள் ஹாரர் படம் என்ற புதிய கான்செப்ட்டை திரையில் காட்டி இருக்கிறார். இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் சுவாரஸ்யம் கூட்டி இருந்தால் ரசிக்கும்படியாக இருந்திருக்கும்.
வழக்கம்போல் சந்தானம் தன் உடன் நடிக்கும் நடிகர்களுக்கு ஸ்பேஸ் கொடுத்து, அவரும் பர்பாம் செய்துள்ளார். வழக்கமான கவுன்ட்டர் டயலாக்கிற்க்கு பதிலாக சிட்டி பசங்களைப் போல் ப்ரோ ப்ரோ என வார்த்தைக்கு வார்த்தை பேசி இருப்பது ரசிப்புக்கு பதில் எரிச்சலை கூட்டுகிறது. புதிய ஹேர் ஸ்டைலும் அவருக்கு செட் ஆகவில்லை. கதாநாயகி கீத்திகா திவாரிக்கு நல்ல ரோல் இருந்தும் பெரிய அளவில் பர்பாம் செய்யவில்லை. அதற்கு பதிலாக கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் இருவரும் சூப்பராக நடித்துள்ளனர்.
கவுதம் மேனன் மற்றும் நிழல்கள் ரவி இருவரும் சட்டிலான நடிப்பை கொடுத்துள்ளனர். மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் காட்சிகளை விட மாறன் வரும் காட்சிகள் கலகலப்பை ஏற்படுத்துகின்றன.
தீபக் குமார் ஒளிப்பதிவில் படம் பளிச்சிடுகிறது. ஆப்ரோ இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை பரவாயில்லை.டிடி சீரிஸில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என சொல்லும் அளவுக்கு இந்த படமும் ரசிக்கும்படியாக உள்ளது. இருப்பினும் காமெடியிலும் இந்த படம் நெக்ஸ்ட் லெவலில் இருக்கும் என எதிர்பார்த்து வருபவர்களுக்கு ஏமாற்றம் தான். முந்தைய பாகங்களில் கதையுடன் காமெடியும் இருக்கும். இதில் கதை எங்கே என கேட்கத் தோன்றுகிறது. வெறும் காமெடியை மட்டும் வைத்துக் கொண்டு முழு படத்தையும் நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். படத்தில் ஸ்ட்ராங்கான வில்லன் இல்லாதது பெரிய மைனஸ். இவர்கள் சண்டை போடுவது பேயுடனா அல்லது மனிதர்களுடனா என தெரியாத அளவுக்கு திரைக்கதையில் தெளிவில்லை.