MH17... மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா- ஐ.நா. கவுன்சில் தீர்ப்பு

13 வைகாசி 2025 செவ்வாய் 07:28 | பார்வைகள் : 361
உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு 298 பயணிகள் மற்றும் ஊழியர்கள் கொல்லப்பட்டதற்கு ரஷ்யாவே காரணம் என்று ஐ.நா. விமானப் போக்குவரத்து கவுன்சில் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
குறித்த விமானத்தில் 196 நெதர்லாந்து குடிமக்களும் 38 அவுஸ்திரேலிய குடிமக்கள் அல்லது வசிப்பவர்களும் பயணித்திருந்ததாக நெதர்லாந்து மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்கள் தனித்தனி அறிக்கைகளில் தெரிவித்துள்ளன.
மட்டுமின்றி, எந்த வகையான இழப்பீடு வழங்குவது என்பது குறித்து சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) கவுன்சில் வரும் வாரங்களில் பரிசீலிக்கும் என்று இரு அரசாங்கங்களும் தெரிவித்துள்ளன.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை 17ல் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH17 ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்குப் புறப்பட்டது.
ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் உக்ரேனியப் படைகளுக்கும் இடையே சண்டை நடந்து கொண்டிருந்தபோது கிழக்கு உக்ரைனில் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
நவம்பர் 2022 ல், தாக்குதலில் ஈடுபட்டதற்காக இரண்டு ரஷ்ய நபர்களையும் ஒரு உக்ரேனிய நபரையும் கொலைக் குற்றத்திற்காக நெதர்லாந்து நீதிபதிகள் குற்றவாளிகளாக அறிவித்தனர்.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக கொந்தளித்த ரஷ்யா, தங்களது குடிமக்களை நாடு கடத்தப் போவதில்லை என்றும் அறிவித்தது. இந்த வழக்கானது 2022 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்தால் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், MH17 விமான விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அவர்களது குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு உண்மையை நிலைநாட்டுவதற்கும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைவதற்கும் இந்த முடிவு ஒரு முக்கியமான படியாகும் என்று டச்சு வெளிவிவகார அமைச்சர் காஸ்பர் வெல்ட்காம்ப் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.