வாழ்க்கைத் துணையைப் பற்றி பகிரக்கூடாத விடயங்கள் பற்றி தெரியுமா ?

10 வைகாசி 2025 சனி 17:27 | பார்வைகள் : 128
இன்றைய பரபரப்பான வாழ்க்கைமுறையில் பலரும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக, தனது வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டு பேசுவதற்கு கூட நேரம் ஒதுக்குவதில்லை. இதனாலேயே சண்டைகள், பிரிவு, விவாகரத்து போன்ற சிக்கல்களும் வருகின்றன. அதேபோல், தனது துணையை பற்றி புரளி பேசுவதும் இதில் அடங்கும். இவ்வாறாக, தனது வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரிடமும், ஏன் சொந்த குடும்பத்தில் கூட பகிரக்கூடாத உளவியல் ரீதியான விஷயங்களை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
திருமண குறிப்புகள் : திருமணம் என்பதே கடினமான விஷயம் தான். திருமணத்தின் போது தம்பதிகள் குறிப்பிட்ட ஒரு வட்டத்திற்குள் வருகிறார்கள். இவர்கள் தங்களுக்குள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் கூட ஆகலாம் என்றாலும், இந்த உறவு முறிந்து போவதற்கு சில நொடிகளே போதும். இதுபோன்ற விஷயங்கள் உங்கள் உறவிலே விரிசலை விழ வைக்கிறது. எனவே, துணையுடனான உங்கள் உறவை வலுப்படுத்த, ஒருவர் தனது துணையைப் பற்றி மற்றவர்களிடம், குடும்பத்தில் கூட ஒருபோதும் சொல்லக்கூடாத சில உளவியல் சார்ந்த குறிப்புகளை இங்கே பார்ப்போம்.
அவர்களின் ஆழ்ந்த பாதுகாப்பின்மை அல்லது பாதிப்புகள் : உங்கள் வாழ்க்கைத் துணைக்கு இருக்கும் ஆழ்ந்த அச்சங்கள், அதிர்ச்சிகள் அல்லது பாதுகாப்பின்மை குறித்து அவர்கள் உங்களுடன் பகிர்ந்து கொண்டதை, நெருங்கிய குடும்பத்தினருடன் கூட சொல்லக்கூடாது, ஏனெனில் அது அவர்களின் நம்பிக்கையை கெடுப்பதற்கு சமமாகும். இந்த அம்சங்கள் பெரும்பாலும் உணர்ச்சி வெளிப்பாட்டின் ஒரு பகுதியாக பாதுகாப்பான தருணங்களில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன, மேலும் அவை அனைவருக்கும் தெரிய வேண்டியவை அல்ல. ஒரு துணை தான் எதிர்கொண்ட ஒரு பாதிப்பை வெளிப்படுத்தும் போது, உணர்ச்சி ரீதியாக தங்களது பாதுகாப்பு குறித்து பேசுகிறார்கள். எனவே, அதனை வேறு ஒருவரிடம் சொல்வது அவர்களின் நம்பிக்கையை உடைப்பதற்கு சமம், இது நீண்டகால சேதம், அவமானம் மற்றும் தொடர்பைத் துண்டிக்கவும் வழிவகுக்கும்.
உங்கள் சண்டைகள் பற்றிய விவரங்கள் : முதலில் உங்கள் சண்டைகளைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வது மிகப்பெரிய தவறு. உங்களின் சண்டை குறித்து மற்றவர்களிடம் சொல்வதும், அவர்களின் ஆலோசனையைப் பெறுவதும் சரியாகத் தோன்றினாலும், அது ஒரு முதிர்ச்சியடைந்த மற்றும் சரியான விஷயம் அல்ல. உங்கள் தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் விவாதங்களில் உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினரை ஈடுபடுத்துவது உங்கள் துணையைப் பற்றிய அவர்களின் பார்வையை நிரந்தரமாக மாற்றிவிடும். உளவியலாளர்களின் கூற்றுப்படி, மோதல் இயல்பானது, ஆனால் தீர்வு தம்பதியினரிடையே இருக்க வேண்டும். நீங்களும் உங்கள் துணையும் விலகிச் சென்ற பிறகும் குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலும் எதிர்மறையான எண்ணங்களைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் ஒரு பக்கமாக இருக்கலாம், உங்கள் விஷயங்களில் தலையிடலாம் அல்லது பொருத்தமற்ற சூழல்களில் அதை பேசி கஷ்டத்தை ஏற்படுத்தலாம்.
எரிச்சலூட்டும் பழக்கங்கள் : மனிதர்களாகிய நாம் அனைவருமே குறைபாடுள்ளவர்கள் தான். ஆனால், உங்கள் வாழ்க்கைத் துணையின் எரிச்சலூட்டும் பழக்கங்களைப் பற்றி மற்றவர்களிடம் பகிரங்கமாகப் பேசுவது அவர்களுக்கு வெட்கமாகவும், அவமானமாகவும் உணர வைக்கலாம். அவர்களை நீங்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் இது காட்டுகிறது. இதற்கு பதிலாக, அவர்கள் உங்கள் வாழ்க்கைத் துணையாக வந்ததற்கு நன்றி தெரிவிப்பது நல்லது. அதேநேரத்தில், அவர்களை அவ்வப்போது பாராட்டுங்கள், குறிப்பாக மற்றவர்கள் முன்னிலையில் பாராட்டுவது, உங்கள் உறவை எவ்வாறு சிறப்பாக மாற்றும் என்பது உங்களுக்கு பின்னர் தெரியவரும்.
கடந்த கால உறவுகள் : உங்கள் துணையின் கடந்த காலம் அவர்களின் தனிப்பட்ட விஷயம், அதை உங்களை நம்பி அவர்கள் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கலாம். ஆனால், அதைப் பற்றி மற்றவர்களுடன் அல்லது குடும்பத்தினருடன் பேசுவது கூட தவறாக வழிநடத்த காரணமாகலாம். ஏனெனில், அது உங்கள் துணையை பற்றி தேவையற்ற முடிவுக்கு மற்றவர்களை தள்ளும். மேலும், அது உங்கள் துணையை அவமானப்படுத்தவும் காரணமாகலாம். உளவியல் ரீதியாக பார்த்தால், சிறந்த பாதுகாப்பு என்பது கடந்த கால அனுபவங்களால் பேசுபொருளாவது, நியாயப்படுத்தப்படுவது அல்லது கேலி செய்யப்படுவது போன்ற பயம் இல்லாமல் பகிர்ந்து கொள்ளவதை உள்ளடக்கியது. இதுபோன்ற, அவர்களின் விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது அவர்களின் நம்பிக்கையை சுக்குநூறாக்குவதற்கு சமமாகும். அதுமட்டுமின்றி, அவர்களின் அவமரியாதைக்கும் இது வழிவகுக்கும்.
நிதி நிலை அல்லது போராட்டங்கள் : உங்கள் துணையின் நிதி நிலைமைப் பற்றி மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவது அவர்களின் தனியுரிமையை மீறுவதாக உணரப்படலாம். இது கடன், வருமான நிலை அல்லது செலவு என எதுவாக இருந்தாலும், நீங்கள் இருவரும் சேர்ந்து அவற்றை வெளியிட ஒப்புக்கொள்ளும் வரை நிதி விவரங்கள் உறவுக்குள் சிறப்பாக வைக்கப்பட வேண்டும்.
ஆளுமை குறைபாடுகள் : நம் அனைவருக்குமே தனித்தன்மைகள் மற்றும் குறைபாடுகள் உள்ளன, ஆனால் உங்கள் துணையின் குறைபாடுகளை மற்றவர்களிடம் வெளிப்படுத்துவது அவமரியாதை அல்லது கேலிக்குரியதாகத் தோன்றலாம். எப்போதாவது வெளிப்படுத்துவது தீங்கற்றதாகத் தோன்றினாலும், மீண்டும் மீண்டும் விமர்சனம் செய்வது, குடும்பத்தினர் முன் உங்கள் துணையின் பிம்பத்தை எதிர்மறையாக உருவாக்குவதற்கு காரணமாகிறது. அதேநேரத்தில், அதைச் சரிசெய்வது கடினமாக இருக்கலாம். உளவியல் ரீதியாக, இது நீண்டகால திருப்தியான உறவின் ஒரு முக்கிய அங்கமான போற்றுதலைக் குறைக்கிறது. இது விசுவாசம் அல்லது ஏற்றுக்கொள்ளல் இல்லாததையும் குறிக்கிறது. புகார்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலாக, உங்கள் துணையுடன் நேரடியாக நிவர்த்தி செய்யுங்கள்.
திருமணத்திற்கு காதல் மட்டும் போதாது : ஒரு திருமணம் நீண்ட காலமாக நீடிக்க காதல் மட்டும் போதாது. காலத்தால் வரும் சோதனையை எதிர்கொள்ள உறவுக்குள் மரியாதையும், நம்பிக்கையும் தேவை. அதோடு, அவர்களுடன் வெளிப்படையான மற்றும் நேர்மையான தொடர்பும் தேவை. ஆனால், குடும்ப உறுப்பினர்கள் உட்பட மற்றவர்களிடம் உங்கள் துணையைப் பற்றி நீங்கள் அடிக்கடி தவறாகப் பேசுவது, அவர்களை சங்கடப்படுத்தக்கூடும், இதனால் அவர்களின் நம்பிக்கை உடையலாம். எனவே, உங்கள் துணையைப் பற்றி வெளிப்படையாகத் தவறாகப் பேசுவதைத் தவிர்க்கவும், அது நகைச்சுவையாக இருந்தாலும் கூட பேசுவது சரியாக இருக்காது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு உறவில் இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்கள்தான் மிக முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது.
மனம்விட்டு பேசுங்கள் : பேசுவது எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எந்தவொரு வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவுக்கும் இது முதுகெலும்பாக இருக்கும். நட்பாக இருந்தாலும் சரி, காதலில் இருந்தாலும் சரி அல்லது வேலையாக இருந்தாலும் சரி, பயனுள்ள பேச்சு நம்பிக்கையை வளர்க்க உதவுகிறது, புரிதலை வளர்க்கிறது மற்றும் தேவையற்ற மோதல்களைத் தடுக்கிறது. ஒருவர் தங்கள் எண்ணங்களையும், உணர்வுகளையும் தெளிவாக வெளிப்படுத்தும் போது, அது தவறான புரிதல்களுக்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.