அவசரம் அவசரமாக அணு ஆயுத அமைப்பு கூட்டத்தைக் கூட்டிய பாகிஸ்தான்- மறுக்கும் அமைச்சர்

10 வைகாசி 2025 சனி 12:13 | பார்வைகள் : 245
இந்தியா - பாகிஸ்தான் மோதல் தீவிரமடைந்துவரும் நிலையில், பாகிஸ்தான் அவசரம் அவசரமாக அணு ஆயுத அமைப்பு கூட்டத்தைக் கூட்டியதாக தகவல் கசிந்துள்ளது.
ஆனால், தேசிய கட்டளை ஆணையத்தின் கூட்டம் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தற்போது மறுத்துள்ளார்.
சனிக்கிழமை அதிகாலை இந்தியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையை அறிவித்ததன் பின்னர், நாட்டின் அணு ஆயுதக் கிடங்கை மேற்பார்வையிடும் உயர் இராணுவ மற்றும் சிவில் அமைப்பின் கூட்டத்திற்கு பாகிஸ்தான் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் தகவல் கசிந்துள்ள நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அப்படியான ஒரு கூட்டம் முன்னெடுக்கப்படவில்லை என்பதுடன், திட்டமிடவும் இல்லை என அவர் ஊடகங்கள் முன்னிலையில் விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக பிரதமர் அந்த நிர்வாகத்தினரை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் கூறியிருந்தது.
வெளியான தகவல்களுக்கு உடனடி விளக்கமளிக்க பாகிஸ்தானின் தகவல் தொடர்பு அமைச்சர் மறுத்துள்ளதாகவே கூறப்படுகிறது.
இதனிடையே, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் உள்ளூர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இந்தியா இப்போதே நிறுத்திக் கொண்டால் நாங்களும் இங்கே நிறுத்துவது பற்றி பரிசீலிப்போம் என்று கூறியிருந்தார்.
அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆகியோருடன் உரையாடியுள்ள நிலையிலேயே, பாகிஸ்தான் தரப்பில் இருந்து அந்த கருத்து வெளியாகியிருந்தது.
இரு தரப்பினரும் பதற்றத்தைத் தணித்து, தவறான மதிப்பீடுகளைத் தவிர்க்க நேரடி தகவல்தொடர்புகளை மீண்டும் நிறுவ வேண்டும் என மார்கோ ரூபியோ வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.