சுற்றுலா சென்ற பிரபல நடிகர் காட்டில் பிணமாக மீட்பு!

29 சித்திரை 2025 செவ்வாய் 15:33 | பார்வைகள் : 189
அஸ்ஸாம் மாநிலத்தின் கர்பாங்கா பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளின் நடுப்பகுதியில் அமைந்த நீர்வீழ்ச்சிக்கு அருகே, ’பாமிலி மேன் 3’ வெப்தொடரில் நடித்த ரோகித் பாஸ்ஃபோர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த சம்பவம் திரையுலகத்தையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சமந்தா நடித்த ‘பேமிலி மேன் 2’ வெப்தொடரை அடுத்து ‘பேமிலி மேன் 3’ உருவானது. இந்த தொடரில் நடித்த நடிகர் ரோகித் கடந்த ஞாயிறன்று நண்பர்களுடன் அஸ்ஸாமின் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை சுற்றிப் பார்க்க புறப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஞாயிறு மதியம் 12.30 மணியளவில் அவர் கடைசியாக தொடர்பில் இருந்ததாகவும், அதன் பின் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதே தின மாலையில், அவருடன் சென்ற ஒருவர் ரோகித்தை ஒரு விபத்தில் சிக்கிய செய்தியை குடும்பத்தினரிடம் தெரிவித்ததாக தெரிகிறது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக அறிவித்தனர்.
இந்த மரணம் கொலையா என கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக, கடந்த சில வாரங்களுக்கு முன் கார் பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், ரஞ்சித் பாஸ்ஃபோர், அசோக் பாஸ்ஃபோர் மற்றும் தரம் பாஸ்ஃபோர் ஆகியோர் ரோகித்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்கள் உள்ளன. மேலும், அமர்தீப் என்பவரும் சந்தேகத்தில் உள்ளனர். சுற்றுலா திட்டத்தை இவர் தான் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் போலீசார் கூறியதாவது: ”ரோகித்தின் உடலில் பல இடங்களில் காயங்களும் தாக்குதல் சுவடுகளும் உள்ளன. முகம், தலை மற்றும் மற்ற பாகங்களில் ஏற்பட்ட காயங்களை மருத்துவ நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். கெளஹாத்தி மருத்துவக் கல்லூரியில் உடற்கூறு பரிசோதனை நடைபெற்ற நிலையில் ரோகித் மரணத்தில் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நான்கு பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது,” என தெரிவித்தனர்.