உலகம் முழுதும் ஜனநாயக அரசியலில் மாற்றம்: ராகுல் பேச்சு

27 சித்திரை 2025 ஞாயிறு 09:02 | பார்வைகள் : 130
உலகம் முழுவதும் ஜனநாயக அரசியலின் அடிப்படை மாறிவிட்டது'', என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் பேசியதாவது: உலகம் முழுவதும் ஜனநாயக அரசியல் அடிப்படையில் மாறிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விதிமுறைகள் அனைத்தும் தற்போது நடைமுறைப்படுத்த முடியாது. பழைய அரசியல் வாதிகள் இறந்த நிலையில், புது அரசியல்வாதிகள் உருவாகின்றனர். இந்த புதிய அரசியல் எப்படி இருக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரஸ் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தது. புதுவகையான ஆக்ரோஷமான அரசியல் உருவானது. இந்த அரசியலில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதிக்கப்படவில்லை. கொள்கைகள் நொறுக்கப்பட்டன. நாங்கள் விரும்பிய படி செயல்பட மீடியாக்கள் விரும்பவில்லை. எனவே வரலாற்றை நாங்கள் திரும்ப பெற, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாதயாத்திரை மேற்கொண்டேன். இந்த பயணம் 4, 000 கி.மீ., நீடித்தது. பாரத் ஜோடோ யாத்திரை மூலம் இரண்டு விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.
உலகம் முழுதும் உள்ள நமது எதிர்ப்பு, கோபம் மற்றும் வெறுப்பு ஆகியவை ஏகபோக ஆதிக்கம் செலுத்துகின்றன. அவற்றுடன் நம்மால் போட்டியிட முடியாது. கோபம், பயம் மற்றும் வெறுப்பு என்று வரும் போது அவர்கள் நம்மை ஒவ்வொரு முறையம் தோற்கடிப்பார்கள். நாம் எங்கே எப்படி செயல்படுகிறோம்? நமக்கான சிறந்த இடங்கள் எங்கே? என்ற கேள்விகள் எழுகின்றன. பாதயாத்திரையின் போது ஏராளமான மக்கள் என்னுடன் சேர்ந்தனர். என்னுடைய பணி என்பது, யாத்திரையை தொடர்வதுடன், மக்கள் பேசுவதை கவனிப்பதும் ஆகும்.
அரசியல்வாதியாக நாம் மேடை ஏறவும், பேசவும் பயிற்சி பெற்றுள்ளோம். ஆனால், எனது நடைபயணத்தின்போது, ஏராளமான மக்கள் வந்ததால் அது சாத்தியமில்லாமல் இருந்தது. இதனால், நான் அவர்கள் பேசுவதை கேட்டேன். இதுபோன்று முன்னர் கேட்டது இல்லை என்பதை பாரத்ஜோடோ யாத்திரையின் பாதியில் உணர்ந்தேன்.
இரண்டாவதாக நான் கற்றுக் கொண்ட விஷயம் மிகவும் சக்தி வாய்ந்தது. அது அன்பு. அந்த யாத்திரையில் அதில் சிக்கிக் கொண்டேன். 2004 முதல் நான் அரசியலில் உள்ளேன். ஆனால், யாரிடமும் அன்பை வெளிப்படுத்தியதில்லை. மக்களுக்கு உதவ நான் கடுமையாக உழைத்துள்ளேன். அதனால், அதனை வெளிப்படுத்தவில்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.