உணவக பயன்பாட்டிற்காக "மெட்ரோ" மொத்த விற்பனை நிலையத்தில் ஒரு லட்சம் பெறுமதியான பொருட்கள் திருட்டு!

26 சித்திரை 2025 சனி 23:25 | பார்வைகள் : 1307
ஏப்ரல் 25 ஆம் திகதி Villeneuve-la-Garenne நகரில் அமைந்துள்ள "மெட்ரோ" மொத்த விற்பனை நிலையத்தில், சுமார் 1 லட்சம் யூரோக்கள் பெறுமதியான உணவுப் பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக பொருட்கள் காணமல் போனதை சந்தேகித்த மெட்ரோ கடை நிர்வாகம், பொருட்களை சோதனை செய்து சந்தேகத்தை உறுதி செய்ததை தொடர்ந்து, காவல்துறையிடம் புகார் அளித்தது.
காவல்துறையினர் நடத்திய இரகசிய கண்காணிப்பின் போது, உணவுப் பொருட்கள் அடங்கிய பலேட்டுகள் (palettes) ஒரு லொரியில் ஏற்றப்பட்டு Saint-Ouen-Seine Saint Denis நகரில் உள்ள ஒரு உணவகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
காவல் துறையினர் நடத்திய சோதனையில், லொரி ஓட்டுனர் உட்பட இருவர் மற்றும் மெட்ரோ கடையில் பணிபுரிபவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், மெட்ரோ கடை ஊழியர் கடை சார்ந்த தகவல்களை உணவக உரிமையாளருக்கு கூறியது தெரியவந்துள்ளது.
இந்த திருட்டு சம்பவத்தில் உணவக உரிமையாளருக்கு திருட்டு மற்றும் சதி செய்த குற்றச்சாட்டுகளும், மெட்ரோ கடை ஊழியருக்கு கணக்கு மோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக நடந்த பல திருட்டுகளால் மெட்ரோ மொத்த விற்பனை நிலையத்திற்கு சுமார் 1 லட்சம் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.