5 ஆண்டு போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் விருப்பம்...!

26 சித்திரை 2025 சனி 15:09 | பார்வைகள் : 200
அனைத்து பணய கைதிகளையும் விடுதலை செய்ய தயாராக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் முக்கிய அமைப்பான ஹமாஸ், நீண்ட காலமாக நடைபெற்று வரும் காசா போர் முடிவுக்கு வருவதற்கான ஒரு முக்கிய முன்மொழிவை முன்வைத்துள்ளது.
சனிக்கிழமையன்று ஹமாஸ் அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் வெளியிட்ட தகவலின்படி, பிடித்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து பணயக்கைதிகளையும் ஒரே கட்டத்தில் விடுவிக்கவும், அதனைத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு போர் நிறுத்தவும் ஹமாஸ் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எகிப்தின் தலைநகரான கைரோவில் மத்தியஸ்தர்களுடன் ஹமாஸ் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தவிருந்த நிலையில், பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி AFP செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "ஒரே முறையில் கைதிகளைப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கும், ஐந்து வருடங்களுக்கு முழுமையான போர் நிறுத்தத்திற்கும் ஹமாஸ் தயாராக உள்ளது" என்று திட்டவட்டமாக கூறினார்.
இந்த முன்மொழிவு, ஏப்ரல் 17ஆம் திகதி ஹமாஸ் நிராகரித்த இஸ்ரேலின் முந்தைய திட்டத்திற்கு பிறகு வந்துள்ளது.
இஸ்ரேலின் அந்தத் திட்டம், பத்து உயிருள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு பதிலாக 45 நாட்கள் மட்டுமே போர் நிறுத்தத்தை முன்வைத்தது.
ஆனால் ஹமாஸ், எந்தவொரு போர் நிறுத்த உடன்பாடும் போரின் நிரந்தர முடிவு, காஸாவிலிருந்து இஸ்ரேலிய படைகள் முழுமையாக விலகுதல், முழுமையான கைதிகள் பரிமாற்றம் மற்றும் போரால் துயரத்திற்கு ஆளான பாலஸ்தீனப் பகுதிக்கு உடனடி மற்றும் போதுமான மனிதாபிமான உதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதற்கு மாறாக, இஸ்ரேல் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. அவர்கள், பிடித்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து பணயக்கைதிகளையும் நிபந்தனையின்றி திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், காஸாவில் உள்ள ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்களை கலைக்க வேண்டும் என்றும் கோருகின்றனர்.
ஹமாஸைப் பொறுத்தவரை, ஆயுதக் குழுக்களை கலைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு "சிவப்புக் கோடு" ஆகும்.