எந்த நேரமும் அமைச்சர் பதவி ராஜினாமா: செந்தில்பாலாஜிக்கு பதில் ரகுபதி மசோதா தாக்கல்!

26 சித்திரை 2025 சனி 18:25 | பார்வைகள் : 170
ஊழல் வழக்கில் ஜாமின் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? என சுப்ரீம் கோர்ட் கெடு விதித்திருந்த நிலையில், சட்டசபையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பதிலாக அமைச்சர் ரகுபதி மசோதாவை தாக்கல் செய்தார். இதனால் செந்தில்பாலாஜி எந்நேரத்திலும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யலாம் என தகவல் பரவி வருகிறது.
அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கித்தருவதாக கூறி லஞ்சம் பெற்ற வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில், கடந்தாண்டு செப்., 26ல், சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. ஆனால், அடுத்த நாளே அவர் அமைச்சராக பதவியேற்றார்.
செந்தில் மீண்டும் அமைச்சராகி விட்டதால், சாட்சியங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் ''நீங்கள் அமைச்சராக இருந்த போது, புகார்தாரர்களுடன் உடன்பாடு செய்து கொண்டதை ஐகோர்ட் சுட்டிக்காட்டி இருந்தது. ஜாமின் தந்தது எங்கள் தவறு தான்'' என தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி,''அமைச்சர் பதவி வேண்டுமா? அல்லது ஜாமின் வேண்டுமா?'' என 4 நாட்களுக்குள் முடிவு செய்ய வேண்டும்'' என சுப்ரீம் கோர்ட் கெடு விதித்தது. இதனால் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை எந்நேரம் வேண்டுமானாலும் ராஜினாமா செய்யலாம் என பரபரப்பாக செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 26) சட்டசபையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் மசோதாவை செந்தில்பாலாஜி தாக்கல் செய்வதாக இருந்தது. ஆனால் அவருக்கு பதிலாக அமைச்சர் ரகுபதி மசோதாவை தாக்கல் செய்தார். இதனால் செந்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யலாம் என்றும், அதனால் தான் வேறு அமைச்சர் மசோதா தாக்கல் செய்ததாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.