2027 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது "ஆசையை" நீதி அமைச்சர் Gérald Darmanin வெளிப்படுத்தினார்!

26 சித்திரை 2025 சனி 00:05 | பார்வைகள் : 593
ஏப்ரல் 25 அன்று தற்போதைய நீதி அமைச்சரும், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் முன்னாள் உள்துறை அமைச்சருமான ஜெரால்ட் தர்மன் (Gérald Darmanin), 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஆசை இருப்பதாக வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் "நான் போட்டியிட ஆசைப்படுகிறேன், அதற்கான திட்டங்களை இப்போதே உருவாக்கிக்கொண்டிருக்கின்றேன்" என்றார். ஆனால், தன்னைவிட நாட்டை நன்கு வழிநடத்தக்கூடிய வேட்பாளர் இருப்பின், அவருக்கு ஆதரவு வழங்கவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Renaissance கட்சியை சேர்ந்த பலரும் போட்டியிடும் சூழலில், ஒரு வேட்பாளரை தெரிவு செய்யும் நடவடிக்கையில், வலதுசாரி கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் இணைந்து யாரை முன்வைக்கலாம் என்பதைப் பற்றி, மிக விரிவான ஒரு திறந்த போட்டியை (une primaire ouverte) நடத்த வேண்டும் என்று ஜெரால்ட் தர்மன் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரியிலும், தனது நாட்டுக்காக ஒரு முக்கியமான திட்டத்தை உருவாக்க விரும்புகிறேன், என்றும் தேர்தலில் ஏதாவது ஒரு வகையில் பங்கேற்க ஆசைப்படுகிறேன் என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் என்பது மக்கள் மனதில் ஒலிக்கும் ஒரு உணர்ச்சிபூர்வமான "சிம்பொனி" இசை போல் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். உதாரணமாக, நிக்கோலா ஸார்கோஸியின் (Nicolas Sarkozy)"அதிகம் வேலை செய்தால், அதிகம் சம்பளம்" போன்ற வாசகங்களை அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.