பாகிஸ்தானுடன் எந்த நிமிடமும் போர் வெடிக்கலாம்!

26 சித்திரை 2025 சனி 05:15 | பார்வைகள் : 108
பஹல்காம் படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களும் நிச்சயம் தண்டிக்கப்படுவது உறுதி,'' என பிரதமர் நரேந்திர மோடி ஆவேசத்துடன் தெரிவித்தார். பொது நிகழ்ச்சியில் வழக்கத்துக்கு மாறாக ஆங்கிலத்தில் உரையாற்றிய மோடி இவ்வாறு தெரிவித்து இருப்பது, உலக நாடுகளுக்கு அவர் அளித்த அவசர செய்தியாகவே பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, இந்தியா - பாக்., இடையே எந்த நிமிடமும் போர் வெடிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில், 26 அப்பாவி சுற்றுலா பயணியரை சுட்டுக்கொன்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி மக்களிடையே நேற்று உரையாற்றினார்.
தப்ப முடியாது
பீஹாரின் மதுபானியில் நடந்த தேசிய பஞ்சாயத்து ராஜ் தின நிகழ்ச்சியில், அவர் தன் பேச்சை துவங்குவதற்கு முன், தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சில நொடிகள் மவுனமாக நின்றார். அதன்பின் வழக்கம்போல் ஹிந்தியில் பேசத்துவங்கிய பிரதமர் மோடி, பயங்கரவாத தாக்குதல் குறித்து பேசத்துவங்கியதும் திடீரென ஆவேசம் அடைந்தவராக, வழக்கத்திற்கு மாறாக ஆங்கிலத்தில் உரையாற்றத் துவங்கினார்.
அவர் பேசியதாவது: இந்த பீஹார் மண்ணில் இருந்து, உலகத்திற்கு இன்று ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். பஹல்காம் படுகொலைகளுக்குக் காரணமான பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு ஆதரவாக உள்ளோரையும் கண்காணித்து, அடையாளம் கண்டு நிச்சயம் தண்டிப்போம். இந்த பூமியின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது. இந்தியாவின் ஆன்மாவை பயங்கரவாதத்தால் சிதைக்க முடியாது. பயங்கரவாதிகளை தண்டிக்காமல் விடமாட்டோம்.
ஆங்கிலத்தில் உரை
நீதி கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இதில், ஒட்டுமொத்த தேசமும் உறுதியாக உள்ளது. மனிதநேயத்தில் நம்பிக்கை உடைய அனைவரும் எங்களுடன் உள்ளனர். இந்த இக்கட்டான நேரத்தில் எங்களுடன் உறுதுணையாக நின்ற பல்வேறு நாடுகளின் மக்களுக்கும், தலைவர்களுக்கும் நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததை அடுத்து, அவர்களுக்கும் இந்த செய்தி சென்றுசேர வேண்டும் என் நோக்கத்தில்தான், பிரதமர் ஆங்கிலத்தில் உரையாற்றியதாகக் கூறப்படுகிறது.
மேலும், பாக்., அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு உணர்த்தும் அவசர செய்தியாகவே இது பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போர் பிரகடனத்தை தான் பிரதமர் இவ்வாறு வெளிப்படுத்தியதாகவும், எந்த நிமிடமும் போர் வெடிக்கும் சூழல் உருவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை டில்லியில் நேற்று சந்தித்தனர். அப்போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஜனாதிபதியிடம் விரிவாக விவரித்தனர்.
இதுதவிர, ஜெர்மனி, ஜப்பான், போலாந்து, பிரிட்டன், ரஷ்யா உட்பட, 20 நாடுகளுக்கான துாதர்களை, நம் வெளியுறவுத்துறை அதிகாரிகள் நேற்று சந்தித்து, பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து விவரித்தனர். இதற்கிடையே, பாகிஸ்தானும் பதிலடி நடவடிக்கைகளை துவங்கியுள்ளது. இந்திய விமானங்கள், தங்கள் வான்பரப்பிற்குள் பறப்பதற்கு பாக்., அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
சிம்லா ஒப்பந்தம்: ரத்து செய்தது பாக்.,
மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் பதில் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில், பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம், இஸ்லாமாபாதில் நேற்று நடந்தது. முக்கிய அமைச்சர்கள், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது; இது போர் நடவடிக்கையாகும்.பாகிஸ்தானின் இறையாண்மை, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கைக்கும் பதில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவுடனான சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து இரு தரப்பு ஒப்பந்தங்கள், வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்டவை உடனடியாக ரத்து செய்யப்படுகின்றன. பாகிஸ்தான் வான் எல்லையை இந்திய விமானங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இஸ்லாமாபாதில் உள்ள இந்திய துாதரகத்தில் உள்ள முப்படை ஆலோசகர்கள் பதவி ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த, 1971ல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரைத் தொடர்ந்து, வங்கதேசம் உருவானது. அந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, 93,000 பாகிஸ்தான் ராணுவத்தினர் சரணடைந்தனர்.பரஸ்பரம் போர்நிறுத்தம் செய்வது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியை நிர்ணயிப்பது உள்ளிட்டவை அடங்கிய, சிம்லா ஒப்பந்தம், 1972ல் கையெழுத்தானது. அப்போதைய பிரதமர் இந்திரா மற்றும் அப்போதைய பாக்., பிரதமர் புட்டோ இதில் கையெழுத்திட்டனர்.
பாகிஸ்தானியர் வெளியேற உத்தரவு
இந்திய வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தி:பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகை விசாக்களும் ரத்து செய்யப்படுகின்றன. இந்த விசாக்கள், ஏப்., 27ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதுபோல, மருத்துவ விசாக்கள், ஏப்., 29ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனால், இங்குள்ள பாகிஸ்தானியர்கள் இந்தக் காலக்கெடுவுக்குள் தங்களுடைய நாட்டுக்கு திரும்ப வேண்டும்.பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்பப் வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.'சார்க்' கூட்டமைப்பு நாடுகளுக்கான விசா விதிவிலக்கு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் விசாக்கள் ரத்து செய்யப்படுகின்றன. இந்த விசா பெற்ற பாகிஸ்தானியர்கள், 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும்.
அரபிக்கடலில் ஏவுகணை சோதனை!
பயங்கரவாத தாக்குதலால் பரபரப்பான சூழல் நிலவி வரும் சூழலில், எந்த அறிவிப்பும் இன்றி அரபிக்கடல் பகுதியில், போர்க்கப்பலில் இருந்து ஏவுகணையை ஏவும் சோதனையை மத்திய அரசு நேற்று திடீரென நடத்தியது. கடற்படையின் ஐ.என்.எஸ்., சூரத் போர்க்கப்பலில் இருந்து துல்லியமான கடல்சார் இலக்குகளை அழிக்கும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றியும் பெற்றுள்ளது.இஸ்ரேல் நாட்டுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, 70 கி.மீ., துாரம் வரைக்கும் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் உடையது.
இதுகுறித்து இந்திய கடற்படை அதிகாரிகள் கூறுகையில், 'இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்., சூரத் கப்பலில் இருந்து கடல்சார் இலக்குகளை துல்லியமாக குறிவைத்து தாக்கும் ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக முடித்துள்ளது. நம் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதில் இது மற்றொரு மைல்கல்' என, தெரிவித்தனர். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் பதற்றம் அடைந்த பாகிஸ்தான், ஏவுகணை சோதனை நடத்தப்போவதாக அறிவித்தது.அடுத்த சில மணி நேரத்தில், இந்தியா ஏவுகணை சோதனையை நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.