மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன்... விசா ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா

25 சித்திரை 2025 வெள்ளி 09:52 | பார்வைகள் : 252
பிரித்தானியாவில் சர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் அரசு பொறுப்பேற்றதிலிருந்தே, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் சாயத் துவங்கியுள்ளதை கவனிக்கமுடிகிறது.
கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானிய பிரதமரானதிலிருந்தே, ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் நல்லுறவுகளை ஏற்படுத்திக்கொள்ள முயன்று வருகிறார்.
இந்நிலையில், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இருதரப்பு உறவுகளை புதுப்பித்துக்கொள்ளும் முயற்சிகளின் ஒரு படியாக, ஐரோப்பிய ஒன்றிய இளைஞர்கள் பிரித்தானியாவிலும், பிரித்தானிய இளைஞர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலும் கல்வி கற்பதையும் பணி செய்வதையும் எளிதாக்கும் வகையில் இளைஞர் விசாக்கள் வழங்கும் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாம்.
இத்திட்டம் குறித்த முழுமையான விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், விரைவில் அவை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எளிமையாகக் கூறினால், 30 வயதுக்குட்பட்ட பிரித்தானிய இளைஞர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலும், ஐரோப்பிய ஒன்றிய இளைஞர்கள் பிரித்தானியாவிலும் கல்வி கற்கவும் பணி செய்யவும் உதவும் விசாக்கள் பரஸ்பரம் வழங்கப்பட திட்டம் தயாராகிறது எனலாம்.