Paristamil Navigation Paristamil advert login

10 நிமிடங்களில் 26 பேரை கொன்ற 5 பயங்கரவாதிகள்

10 நிமிடங்களில் 26 பேரை கொன்ற 5 பயங்கரவாதிகள்

25 சித்திரை 2025 வெள்ளி 07:46 | பார்வைகள் : 207


ஜம்மு -- காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதல் தொடர்பான முதல் கட்ட விசாரணையில், ஆயுதங்களுடன் வந்த ஐந்து பயங்கரவாதிகள், 10 நிமிடங்களில், 26 பேரை கொன்றது தெரியவந்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற பைசரன் புல்வெளி பகுதியில், ஏப்.22ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாவது:

பைசரன் புல்வெளி பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் குவிந்திருந்தனர். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க, பெரியவர்கள், சிற்றுண்டிகளை சாப்பிட்டபடி இயற்கை எழிலை ரசித்துக் கொண்டிருந்தனர்.

மதியம் 1:50 மணிக்கு, அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து சிலர் வந்தனர். ராணுவ உடையில் இருந்த அவர்கள், சுற்றுலா பயணியரிடம், அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கேட்டு, சுடத் துவங்கினர்.

இவ்வாறு, ஐந்து பயங்கரவாதிகள், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள மூன்று இடங்களில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில், 25 சுற்றுலா பயணியர் மற்றும் குதிரையேற்றத் தொழிலாளி ஒருவர் என, 26 பேர் கொல்லப்பட்டனர்.

வெறும், 10 நிமிடங்களில் இந்த தாக்குதலை நடத்திய அந்த பயங்கரவாதிகள், மீண்டும் வனப்பகுதிக்குள் நுழைந்து தப்பிச் சென்றனர்.

பஹல்காமில் இருந்து, பைசரன் புல்வெளி பகுதிக்கு, கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் வர முடியாது. கடினமான பாறைகள், வனப்பகுதி, நடுவில் நீரோடைகள், களிமண் பாதை என இந்த சாலை உள்ளதால், குதிரைகள் வாயிலாகவே வர முடியும். அல்லது நடந்தே வர முடியும்.

இதனால், தாக்குதல் நடந்து முடிந்து, 30 நிமிடங்களுக்குப் பிறகே, மதியம் 2:30 மணிக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மதியம் 3:00 மணிக்குப் பிறகே, காயமடைந்தவர்களுக்கு உதவிகள் கிடைத்தன.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் சிலர் உயிருடன் போராடிக் கொண்டிருந்தனர். உடனடியாக உதவி கிடைத்திருந்தால், ஒரு சிலர் பிழைத்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பயங்கரவாதிகள் ஏற்கனவே திட்டமிட்டு, இந்த தாக்குதலை நிறைவேற்றியுள்ளனர். அவர்களில் சிலர், கேமரா பொருத்தப்பட்ட ஹெல்மெட் அணிந்திருந்தனர். அதில் தாக்குதல் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மிகவும் நெருக்கத்தில் இருந்து, தலையில் சுட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


இரக்கமில்லாமல் கொன்றனர்

பயங்கரவாதிகள் தாக்குதலில், கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பாரத் பூஷண், 35, கொல்லப்பட்டார். தன் மனைவி, டாக்டர் சுஜாதா மற்றும் 3 வயது மகனுடன், சுற்றுலாவுக்கு அவர் சென்றிருந்தார்.

நடந்த சம்பவம் குறித்து டாக்டர் சுஜாதா கூறியுள்ளதாவது: பைசரன் புல்வெளி என்பது மிகப் பெரிய திறந்தவெளியாகும். ஆங்காங்கே டென்ட் அமைக்கப்பட்டு கடைகள் இயங்கி வந்தன.திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. பலரும் அலறியடித்து ஓடினர். ஒரு டென்டில், நாங்கள் மூவரும் பதுங்கினோம். அருகில் உள்ள டென்ட்களில் இதுபோல் இருந்தவர்களை, பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

எங்கள் டென்ட்க்கு வந்தவர்களிடம், 'எனக்கு, 3 வயது மகன் இருக்கிறான். அவனுக்காக விட்டுவிடுங்கள்' என, பாரத் பூஷண் கெஞ்சினார். ஆனால், இரக்கமில்லாமல், சுட்டுக் கொன்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்