லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்?

24 சித்திரை 2025 வியாழன் 10:40 | பார்வைகள் : 284
தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனராக உயர்த்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். கோயம்புத்தூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட லோகேஷ் கனகராஜ், பேங்க் வேலையில் கைநிறைய சம்பளம் வாங்கி வந்தாலும், சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குறும்படங்கள் மூலம் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த துவங்கினார்.
பின்னர் 2016 ஆம் ஆண்டு 'அவியல்' என்ற ஆந்தாலஜி படத்தில், லோகேஷ் கனகராஜ் படைப்பு இடம்பெற வாய்ப்பு வழங்கியவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ராஜ் தான். இதை தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டு த்ரில்லர் கதையை மையமாக வைத்து, 'மாநகரம்' படத்தின் மூலம், அறிமுக படத்திலேயே சிறந்த இயக்குனராக ரசிகர்களால் அறியப்பட்டார். சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், சந்தீப் கிஷான், ரெஜினா கஸாண்ட்ரா, முனீஷ்காந்த், சார்லி, ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இதை தொடர்ந்து கார்த்தியை வைத்து இவர் இயக்கிய 'கைதி' திரைப்படம் தாறு மாறு ஹிட் அடித்தது. இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் தேர்வு லோகேஷ் கனகராஜாக மாறினார். மேலும் விஜய்யை வைத்து மாஸ்டர், கமல் ஹாசனுடன் விக்ரம், 2-ஆவது முறையாக விஜய்யை வைத்து இயக்கிய லியோ என இதுவரை தோல்வியே கொடுத்திடாத இயக்குனராக உயர்ந்து நிற்கிறார்.
'லியோ' படத்தை தொடர்ந்து, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து, 'கூலி' படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் தங்க கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் தேவா என்கிற கதாபாத்திரத்தில், கேங் ஸ்டாராக நடித்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து, நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகீர், ஸ்ருதி ஹாசன், மோனிகா ஜான் போன்ற பலர் நடித்துள்ளனர்.
ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள, இந்த படத்தின் புரமோஷன பணிகள் கூடிய விரைவில் துவங்க உள்ளதால் லோகேஷ் கனகராஜ், சமூக வலைப்பக்கங்களில் இருந்து விலகுவதாகவும் அண்மையில் அறிவித்தார். இது ஒருபுறம் இருக்க, லோகேஷ் கனகராஜ் 'கூலி' படத்தின் ப்ரீ புரோடக்ஷன் பணிகளை கவனித்துக் கொண்டே, தன்னுடைய அடுத்த படத்தின் கதையை எழுதி முடித்ததோடு இந்த படத்தில் நடிக்க உள்ள ஹீரோ மற்றும் ஹீரோயின் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறாராம். இதுகுறித்து தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி, சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக கமல்ஹாசனின் மகளும் கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஸ்ருதி ஹாசனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது