கவுன்சிலர்கள் பதவி நீக்கத்தை எதிர்த்த வழக்கு; அரசின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி

22 சித்திரை 2025 செவ்வாய் 10:00 | பார்வைகள் : 225
கவுன்சிலர்கள் பதவி நீக்க உத்தரவை எதிர்த்த வழக்கில், வரும் 24ம் தேதிக்குள், அரசு பதிலளிக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை நீண்ட நாள் தள்ளி வைக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூறி, சென்னை மாநகராட்சி, 5வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சொக்கலிங்கம்,189வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பாபு, தாம்பரம் மாநகராட்சி 40வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் ஜெயபிரதீப் ஆகியோர் பதவி நீக்கப்பட்டனர்.
மேலும், உசிலம்பட்டி நகராட்சி தலைவரும், தி.மு.க.,வை சேர்ந்தவருமான, 11வது வார்டு கவுன்சிலர் சகுந்தலாவும் பதவி நீக்கப்பட்டார்.
இதற்கான உத்தரவை, நகராட்சி நிர்வாகத்துறை செயலர், கடந்த மார்ச் 27ல் பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அனைவரும் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள், நேற்று நீதிபதி ஜெ.சத்தியநாராயண பிரசாத் முன் விசாரணைக்கு வந்தன.
அப்போது, மனுதாரர்ஜெயபிரதீப் தரப்பில் டில்லி வழக்கறிஞர் எஸ்.ராகசந்தேஷ் ஆஜராகி வாதிட்டதாவது:
மனுதாரர் தரப்பில் அளித்த பதில் பரிசீலிக்கப்படவில்லை. சுயேச்சையாக தேர்வான அவருக்கு அப்பகுதியில் நல்ல பெயர் உண்டு.
தொகுதியில் நடக்கும் முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்ப துவங்கியதால், அவர் அரசு அதிகாரிகளால் ஓரங்கட்டப்படுகிறார். நீக்கியதுசட்டவிரோதம் என்பதால், அதை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
அரசு தரப்பில், வழக்கு விசாரணையை, கோடை விடுமுறைக்கு பின் தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
மற்ற கவுன்சிலர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.டி.மோகன், வழக்கறிஞர் செல்வம் ஆகியோர், கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
விசாரணையை நீண்ட நாள் தள்ளிவைக்கக்கூடாது; வரும் 24ம் தேதி தள்ளி வைக்க கோரினர்.
இதையடுத்து, இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையோ அல்லது நோட்டீசோ பிறப்பிக்கப்படாது என தெரிவித்த நீதிபதி, வரும் 24ம் தேதிக்கு தள்ளிவைத்து, அதற்குள் மனுக்களுக்கு அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.