மாநகராட்சி கழிவறைக்கு அண்ணாதுரை, கக்கன் பெயர் அண்ணாமலை கண்டனம்

21 சித்திரை 2025 திங்கள் 18:38 | பார்வைகள் : 314
கோவை மாநகராட்சி கழிவறைக்கு வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, கக்கன் ஆகியோர் பெயர்களை அழிக்க வேண்டும், அதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
கோவை மாநகராட்சியில் கழிவறை ஒன்றிற்கு முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, கக்கன் ஆகியோர் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுபற்றிய விரிவான செய்தியை தினமலர் நாளிதழ் வீடியோ வடிவில் வெளியிட்டது. இந்த செய்தியை அறிந்த பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அவர் தமது அறிக்கையில் கூறி உள்ளதாவது;
கோவை மாநகராட்சியில், முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரை மற்றும் காமராஜர் அமைச்சரவையில் பணியாற்றிய நேர்மையான தலைவர் கக்கன் ஆகியோர் பெயரை, கழிவறைக்கு வைத்திருக்கிறார்கள். எளிமையான இரண்டு தலைவர்களை அவமதிக்கும் கோவை மாநகராட்சியின் இந்த தரம்தாழ்ந்த செயலுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் பஸ் நிலையங்கள், அரசு கட்டடங்களுக்கெல்லாம் தனது தந்தை பெயரை வைத்து அழகு பார்க்கும் முதல்வர் ஸ்டாலின், அவரை விட மகத்தான தலைவர்கள் பெயரை, கழிப்பறைக்கு வைப்பது, அவர்களை அவமானப்படுத்தும் நோக்கமே அன்றி வேறென்ன?
உடனடியாக, கழிவறையில் இருந்து தலைவர்கள் பெயரை அழிக்க வேண்டும் என்றும், இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.