தனித்து நிற்பதில் மாற்றம் இல்லை.. பா.ஜ., அழைப்பு: சீமான் நிராகரிப்பு

19 சித்திரை 2025 சனி 14:35 | பார்வைகள் : 333
சட்டசபை தேர்தலில், தனித்தே போட்டியிடுவோம்,'' என, அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். இதன் வாயிலாக, பா.ஜ., அழைப்பை, அவர் நிராகரித்தார்.
நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழினப் பேரேழுச்சிப் பொதுக்கூட்டம், கோவையில் மே 18ல் நடக்க உள்ளது. இந்த பொதுக்கூட்டத்திற்கான களப் பணிகளை திட்டமிடுவது தொடர்பாக, கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களை சேர்ந்த பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி, சென்னை கே.கே.நகரில் நேற்று நடந்தது.
அதில், சீமான் பேசியதாவது:
ஒரு கட்சியை தங்களது கூட்டணிக்கு வர வேண்டும் என்று எதிர்ப்பார்த்து, அழைப்பது இயல்பான ஒன்று. ஆனால், எங்களது நிலைப்பாடு வேறு. தேர்தல் அரசியல், கட்சி அரசியல் செய்பவர்கள் தான், பிற கட்சிகளை தேடி, கட்சி தலைமை அலுவலகங்களை தேடி செல்வர். நாங்கள் மக்களிடமிருந்து வந்தவர்கள். எப்போதும் மக்களுடன் சேர்ந்துதான் தேர்தலை சந்திப்போம். மக்களுடன் சேர்ந்துதான் அரசியல் செய்கிறோம்.
கூட்டணிக்கு எல்லாரும் அழைக்கின்றனர்; அதற்கு நன்றி. ஆனால், எங்களுடைய பயணம், எங்களது கால்களை நம்பி தான் இருக்கிறது. அடுத்தவர் கால்களை, தோள்களை நம்பி, நாங்கள் பயணத்தை துவங்கினால், எங்களது இலக்கை நோக்கி அப்பயணம் போகாது. பிறர் தோள் மீது ஏறி நின்று, நான் உயரமானவன் என்று காட்டுவதை விட, தனித்து நின்று, உண்மையான உயரத்தை காட்டுவதே மேலானது.
கூட்டணி வைத்து, 10 இடங்கள் வென்று, சட்டசபைக்கு சென்று பேசினாலும், சபைக்குறிப்பில் இருந்து நீக்கத்தான் போகின்றனர். அதற்கு வெளியில் இருந்து, நினைத்ததை பேசிக் கொண்டே இருக்கலாம்.
எங்களின் கனவை நிறைவேற்ற, 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம். அதில் தலா, 117 பெண்கள், ஆண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். 134 தொகுதிகளில் இளைஞர்-இளைஞிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
அரசியல் வரலாற்றில் நிராகரிக்கப்பட்ட தமிழ் சமூகங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு வரும் தேர்தலில் வாய்ப்பளிக்கப்படும். பொது தொகுதிகளில், ஆதிக்குடிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். தற்போது, 100 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். கன்னியாகுமரியில் ஆறு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தென்காசி, துாத்துக்குடியில் வேட்பாளர்களை அறிவித்து விட்டோம். தற்போது சின்னத்துக்காக காத்திருக்கிறோம்.
திராவிட கட்சிகள் எத்தனையோ ஆண்டுகள் ஆட்சி செய்தன. இத்தனை ஆண்டுகள் கழித்து, தற்போது, தமிழில் அரசாணை வெளியிடப்படும் என, அறிவிக்கின்றனர். காரணம், தமிழ் தேசியமும், நா.த.க.,வும் வளர்வதுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
வென்றால் மாலை இல்லையென்றால் பாடை
நான் சொல்வதற்கு மாறாக, தேர்தலில் நிற்க வேண்டும் என்போர், ஸ்டாலின், விஜய் கட்சியில் போய் சேரலாம். நானே சேர்த்து விடுகிறேன். அங்கு, என்னிடம் இருந்து வந்தவர்கள் என்றால், உடனே சீட்டு தந்து விடுவர்.
சட்டசபை தேர்தலில் வென்றால், அவர்கள் பல்லக்கில் ஏறட்டும். தோற்றால், சிறிது பால்டாயில் குடித்துவிட்டு படுத்து விடுங்கள். எப்படி இருந்தாலும் மாலை உறுதி. நா.த.க., பேனரில் தறுதலைகள் போல், தலையை விதவிதமான கெட்டப்புகளில் வைத்திருப்பது போன்ற, புகைப்படத்தை வைக்கக்கூடாது. நல்ல புகைப்படங்களை வையுங்கள். இந்த படையை சரியாக வழி நடத்தி செல்கிறேன் என்ற நம்பிக்கை இருந்தால், என்னுடன் நில்லுங்கள். இல்லை என்றால், போய் கொண்டே இருங்கள்.